கேரளாவில் உள்ள குட்டி காஷ்மீர் – காந்தளூர்
x
இன்பம் துன்பம் இரண்டும் கலந்ததுதான் மனித வாழ்க்கை. இவை இரண்டிலும் எது அதிகமாக இருந்தாலும் நாம் வாழும் வாழ்க்கை மீது வெறுப்பும் சலிப்பும் வந்துவிடும்.
இப்படி நமக்கு ஏற்படும் வெறுப்பையும் சலிப்பையும் மறந்து கொஞ்ச நாள் நிம்மதியாக வாழவேண்டும் என்பதே பலரது கனவு. இவற்றை எல்லாம் எப்படி மறப்பது என்ற கேள்விக்கு விடை தெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு நிம்மதியை நாடுகின்றனர். அவற்றுள் சிலர் தனிமையை விரும்புவது, சிலர் நண்பர்களுடன் பொழுதை போக்குவது, சிலர் ஆடல் பாடல் என தனக்கு பிடித்ததை செய்வது, இன்னும் சிலர் கோவில், குளம் என செல்வது இப்படி அடுக்கிகிக்கொண்டே போகலாம்.
ஆனால் இவை அனைத்தும் ஒரே நேரத்தில்,ஒரே இடத்தில் கிடைத்தால் எப்படி இருக்கும். நினைக்கும் பொழுதே சந்தோசத்தின் எல்லைக்கு அளவில்லை.
அனைத்தும் ஒரு சேர கிடைக்கும் இடம் தான் சுற்றுலா. ஆம் சுற்றுலா என்றாலே ஊர் சுற்ற கிளம்புவதுதானே அர்த்தம்.
எனக்கு ஊர் சுற்றுவது பிடிக்காது என சொல்பவர்கள் இங்கு யாரேனும் உண்டா. யாரும் இருக்கமாட்டார்கள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்று ஊர் சுற்றிப்பார்பது.
சுற்றிப்பார்க்க கால நேரம் எதுவும் கிடையாது. ஏனெனில் சில இடங்கள் பகலில் அழகாக இருக்கும், சில இடங்கள் இரவில் மட்டுமே அழகாக தெரியும்.
சில இடங்கள் காலை மாலை என எந்த நேரத்தில் சென்றாலும் பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
நானும் என்னுடைய சலிப்பு நிறைந்த வாழ்க்கையை மறந்து நிம்மதியாக சில நாட்கள் இருக்க விரும்பினேன். எங்கு செல்வது என்ற குழப்பம் மேலும் அதிகரிக்க தொடங்கியது.
குறைந்த செலவில் நிறைந்த மன நிம்மதியை எப்படி அடைவது என்ற குழப்பம் எனக்குள்ளே இருந்தது. குறைந்த செலவில் நான் தேர்ந்தெடுத்த இடம் தான் கேரளா.
கேரளா என்றாலே நம்முடைய ஆழ்மனதில் தோன்றுவது அங்குள்ள தென்னை மரங்கள், கடற்கரைகள், அடர்ந்த காடுகள், தேயிலை தோட்டங்கள், உயரமான சிகரங்கள் என கண்ணுக்கு குளிர்ச்சி நிறைந்த இடங்கள் பல உண்டு.
அதிலும் ஆயுர்வேத மருத்துவம், மசாலா பொருள்கள், கதகளி நடனம் என இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
கேரளாவை பொறுத்தவரையில் அங்குள்ள இயற்கை அழகை ரசிக்க ஏரளமான சுற்றுலாப்பயணிகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருவதை நம்மால் பார்க்கமுடியும்.
அவ்வளவு சிறப்புகள் இந்த கேரளாவில் கொட்டிக்கிடக்கு, அதோடு பல சாகச விளையாட்டுகளும் இங்குள்ளது. கேரளாவில் உள்ள மலைவாஸ்தலம் மற்றும் குட்டி காஷ்மீர் என்றழைக்கக்கூடிய “காந்தளூர்” சுற்றுலா தளத்தை சுற்றி பார்க்க விரும்பினேன்.
எப்போது சுற்றுலா செல்லலாம் என யோசிக்கும்பொழுதுதான் யோசனை தோன்றியது சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து விடுபட ஏப்ரல் மாதத்தை தேர்வு செய்தேன். ஏப்ரல் இறுதியில் காந்தளூர் சுற்றுலா செல்ல நினைத்தேன்.
கேரளாவில் உள்ள குட்டி காஷ்மீர் – காந்தளூர் :-

இயற்கை அழகுக்கும் அருவிகளுக்கும் மட்டும் காந்தளூர் சொந்தமல்ல. கடல்மட்டத்திலிருந்து ஐந்தாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இங்கு இயற்கையாகவே விளையக்கூடிய பழங்களுக்கும் , காய்கறிளுக்கும் சொந்தம் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
குட்டி காஷ்மீர் என அழைக்கப்படுவதற்கு மற்றொரு முக்கிய காரணம் ஆப்பிள். ஆம் காஷ்மீருக்கு அடுத்ததாக இயற்கையாக பயிரிடப்படும், ஆப்பிள் விளையும் ஒரே இடம் காந்தளூர் தான். இப்பொழுது நமக்கே புரிந்திருக்கும் குட்டி காஷ்மீர் என அழைக்கப்படும் ஊர் “காந்தளூர் “.
நினைத்ததை போலவே ஏப்ரல் மாதமும் வந்தது. நாட்கள் நெருங்க நெருங்க இயற்கை அழகிலும், தண்ணீர் ஆர்பரித்துக்கொட்டும் சத்தத்தையும், அமைதியான சூழலையும் எப்போது உணரப்போகிறோம் என்ற எண்ணம் என்னுடன் தொற்றிக்கொண்டது.
சாதாரணமாக வெயில் அதிகம் உள்ள நேரத்தில் வெளியில் செல்வதே கொடுமையாக இருக்குமே, இந்த சூழலில் சுற்றுலா சென்றால் எப்படி இருக்குமோ என நினைக்கும்போதே பயமாக இருந்தது.
ஆனால் அந்த பயத்தை போக்கும் விதமாக காந்தளூரை அடைந்ததும் குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. கோடைகாலத்திலே இவ்வளவு குளிர்ச்சியாக இருக்கிறது என்பதை என்னால் நம்பமுடியவில்லை. அப்போ குளிர் மற்றும்பனிக்காலங்களில் இந்த இடம் எப்படி இருக்கும் என மனதிற்குள் நினைத்து பூரிப்படைந்தேன்.
இயற்கை அன்னையின் வரப்பிரசாதமாக பார்க்கப்படும் இடம் தான் கேரளத்தில் உள்ள காந்தளூர். காந்தளூரை பொறுத்தவரையில் சுற்றிலும் மலைக்குன்றுகள், பல அருவிகள் மற்றும் நீர்விழ்ச்சிகள் என சொல்லிக்கொண்டே போகலாம்.
குறிப்பாக நீர்விழ்ச்சிகள் அதிகம் கொண்டுள்ள இடமாக காந்தளூர் இருந்தது. சில மணிநேரம் அடர்ந்த வனப்பகுதிக்குள் ட்ரெக்கிங் சென்ற பிறகு நீர்விழ்ச்சிகளை அடைவது கண்ணுக்கு விருந்தளிக்கக்கூடிய ஒன்று. சாகசப்பிரியர்களுக்கு ஏற்ற இடம் காந்தளூர்.
காந்தளூரை பொறுத்தவரையில் பிரபலமான சுற்றுலா தலமாக இல்லை என்றாலும், இங்கு பார்க்கவேண்டிய இடங்கள் நிறைய உள்ளது.
அதே போல அதிகமான சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் இடமாக தற்பொழுது மாறிவருகிறது. காந்தளூரை சுற்றி பெயர் தெரியாத நீர்விழ்ச்சிகள், அருவிகள் ஏராளம் உண்டு.
வழித்தடம் :-

தமிழக மற்றும் கேரளா எல்லையில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த காந்தளூர்.
தமிழ்நாட்டில் இருந்து இங்கு வருவதற்க்கு பேருந்து வசதி உண்டு. அதே போல சென்னையிலிருந்து ரயில் பயணமும் செய்யலாம். யார் எங்கிருந்து காந்தளூர் வர விரும்பினாலும் முதலில் உடுமலை பேட்டையை அடைய வேண்டும்.
உடுமலை பேட்டையிலிருந்து ஜீப் சவாரி மூலமாகவும் செல்லாம். இல்லையெனில் குறைந்த கட்டணத்தில் பயணிக்க விரும்பினால் பேருந்து மூலமாகவும் செல்லாம் .
உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் வழியில் மறையூர் என்ற இடம் உள்ளது. இங்கிருந்து இடதுபக்கம் ஒரு பாதை செல்லும், அதனை பின் தொடர்ந்து போனால் ஒரு மலையேற்றம் வரும். அந்த அழகிய மலை தான் காந்தளூர்.
இரண்டு நாள் சுற்றுலா :-
நான் காந்தளூருக்கு சென்றபோது டென்ட் ஸ்டே, ரூம்ஸ் மற்றும் மட் அவுஸ் என பலவகையான விடுதிகள் இருந்தது. நாங்கள் அங்குள்ள ஒரு சிறு மலையின் உச்சியில் டென்ட் கேம்ப்பில் தான் தங்கியிருந்தோம்.
இந்த விடுதியை பொறுத்தவரையில் சுற்றிலும் மலைகள், பள்ளத்தாக்குகள், அருவிகள், நீர்விழ்ச்சிகள் என பார்ப்பதற்க்கே கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இங்கு குறைந்த கட்டணத்தில் நிறைய கூடார விடுதிகள் உள்ளன.
ஓவ்வொரு கூடாரத்திலும் குறைந்தபட்சமாக நான்கு நபர்கள் வரை தங்கலாம். அவ்வளவு பெரிய டென்ட் கேம்ப் தான் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் குடும்பத்தோடு வருபவர்களுக்கு வேறு எதாவது தங்கும் விடுதி கிடைக்குமா என்ற கேள்வி மனதில் எழலாம். கவலையே படவேண்டாம் இந்த இடத்தில் மண்வீடு அழகாக உள்ளது.
நான் குடும்பத்தோடு செல்லவில்லை, தனியாகத்தான் சுற்றுலா சென்றேன். அதனால் எனக்கு இந்த கூடாரம் விடுதியே போதுமானதாக இருந்தது.
நான் காலை 11 மணிக்கு இந்த காந்தளூர் டென்ட் போடப்பட்டிருக்கும் இடத்தை சென்றடைந்தோம். அங்குள்ள விடுதியில் செக் இன் வழிமுறைகளை முடித்த பிறகு, கொண்டுசென்ற உடைமைகளை அங்குள்ள டென்ட் கேம்பில் வைத்துவிட்டேன்.
இந்த சுற்றுலாவை பொறுத்தவரையில் இரண்டு பகல் மற்றும் ஒரு இரவு என்ற பேக்கேஜில் தான் நான் சென்றிருந்தேன். இந்த இடத்தில் அதிகபட்சமாக 6 நபர்கள் வரை டென்ட் கேம்பில் தங்கலாம்.
சுற்றிப்பார்க்கவேண்டிய இடங்கள் :-

நாம் காந்தளூரில் உள்ள சுற்றுலா தளங்களை ரசிக்க தங்கியிருந்த விடுதியிலிருந்தே நமக்கு ஜீப் ஏற்பாடுசெய்து கொடுப்பார்கள். அந்த ஜீப்பில் நானும் இன்னும் சக சுற்றுலாப் பயணிகளும் பயணம் மேற்கொள்ள ஆரம்பித்தோம்.
காந்தளூர் சுற்றுலாவை பொறுத்தவரையில் பல இடங்களை சுற்றிப்பார்க்க போகிறோம். எந்தெந்த இடத்தை சுற்றிப்பார்க்க போகிறோம் என இப்போது பார்ப்போமா.
- காந்தளூர் நீர் வீழ்ச்சி(Private Water Falls)
2.ஒத்த மலை வியூ பாயிண்ட் (Othamala View Point)
- லெமன் புல் வியூ பாயிண்ட் மற்றும் ஷூடிங் பாயிண்ட் (Lemon Grass View point and shooting point)
4.தேன் பாறை (Honey Rock )
- புரூட்ஸ் கார்டன் (Fruits Garden) என அடுத்தடுத்து சுற்றுலா இடங்களை சுற்றிப்பார்க்க போகிறோம்.
காலை 11 மணியளவில் இருந்தே நம்முடைய பயணம் ஆரம்பமானது. நம்மை முதலில் அழைத்து செல்லும் இடம் நீர்விழ்ச்சி உள்ள பகுதி. நீர்விழ்ச்சியில் சென்று குளிக்கலாம் என முடிவெடுத்தேன்.
-
காந்தளூர் நீர் வீழ்ச்சி (Private Water Falls):-
நம்முடைய ஜீப் ஒரு குறிப்பிட தூரம் வரை மட்டுமே செல்லும். ஜிப் கடைசியாக நிற்கும் இடம் ஒரு அழகானகாட்சியளிக்கக்கூடிய வியூ பாயிண்ட்.
இந்த இடத்தில் நின்றுகொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் வரை பார்த்தால்பசுமையான மரங்கள் மற்றும் சிறு சிறு கிராமங்கள் என அழகாக தெரியும். பார்ப்பதற்கே அவ்வளவு அழகு, தேவைஎன்றால் இந்த இடத்தில் நின்றுகொண்டு புகைப்படம் கூட எடுத்துக்கொள்ளலாம்.
நான் காந்தளூர் நீர்விழ்ச்சியைபார்க்க ஆவலோடு இருந்ததால் புகைப்படம் எடுக்கும் ஞாபகம் வரவில்லை.
இந்த வியூ பாயிண்ட்டிலிருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் ட்ரெக்கிங் சென்றால் மட்டுமே அந்தநீர்விழ்ச்சியை நம்மால் அடைய முடியும்.
அதனால் நானும் என்னுடன் வந்த சக சுற்றுலா பயணிகளும் காடுகளைரசித்துக்கொண்டும், செடி கொடிகளுடன் பேசிக்கொண்டும் அங்கிருந்த மெல்ல நடக்க ஆரம்பித்தோம்.
நாங்கள்சென்ற காட்டுப்பாதையானது மலையின் உச்சியிலிருந்து நடக்க ஆரம்பித்து இறுதியில் மலைக்குன்றின் சரிவில்இறங்கியதை போன்ற உணர்வு மனதில் ஏற்பட்டது. லேசாக தண்ணீர் கொட்டும் சத்தம் காதை துளைக்க ஆரம்பித்தது.
கிட்டத்தட்ட நீர்விழ்ச்சி உள்ள இடத்திற்கு வந்துவிட்டோம். ஏப்ரல் மாதத்தில் வந்ததால் அருவியில் தண்ணீர் வருமோவராதோ என்ற கேள்வி மனதிற்க்குள் இருந்துகொண்டே வந்தது.
சில மணிநேர ட்ரெக்கிங்கிற்க்கு எங்குவீணாகிவிடுமோ என்ற வருத்தமும் இருந்தது .பிறகு பார்த்தால் தான் தெரிகிறது எவ்வளவு அழகான நீர்விழ்ச்சி என்று. அதிலும் தண்ணீர் சற்று அதிகமாகவே கொட்டத்தொடங்கியது.
தண்ணீர் கொட்டும் அழகும், சுற்றியுள்ள பசுமைமிகுந்த காடுகளும் நம்மை காந்தம் போல் கவர்ந்திழுக்கிறது. இந்த இடத்தில் ஏற்கனவே சில சுற்றுலா பயணிகள்குளித்துக்கொண்டிருந்தனர்.
இதில் நண்பர்களாகவும் சிலர் வந்திருந்தனர், சிலர் குடும்பமாகவும் வந்திருந்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் உற்சாகத்தில் இருந்ததை நம்மால் உணரமுடிந்தது. கேரளாவில் உள்ள குட்டி காஷ்மீர் காந்தளூர்
நான் சென்றபோது ஒரு குடும்பத்தில் உள்ள அப்பா, அம்மா, இரண்டு குழந்தைகள் என நான்கு நபர்கள்குளித்துக்கொண்டிருந்தனர். நானும் சரி என்னுடன் வந்த மற்ற சுற்றுலா பயணிகளும் சரி அவர்களுக்கு நாம்தொந்தரவு கொடுக்கக்கூடாது என்பதற்காக சற்று ஓரமாக உள்ள பாறையின் மீது அமர்ந்தோம்.
பின்பு அந்தபேமிலியில் உள்ளவர்கள் அனைவரும் குளித்துமுடித்த பிறகே நாங்கள் தண்ணீரில் விளையாட ஆரம்பித்தோம். தண்ணீருடைய வரத்து அதிகமாக இருந்ததால் மிகவும் ஜாலியாக இருந்தது.
குறைந்தது ஒரு மணி நேரம் வரை இந்தஅருவியில் தான் நேரத்தை போக்கினோம். நண்பர்களுடன் இதுபோன்ற இடங்களுக்கு வந்தால் வேற லெவல்அனுபவமாக இருக்கும்.
பல திரைப்படங்கள் இந்த இடத்தில் ஒரு காட்சியாக எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படமான “நினைத்தேன்வந்தாய்” படத்தில் பல காட்சிகள் இங்கு தான் எடுக்கப்பட்டது.
இத்திரைப்படத்தில் இளைய தளபதி விஜய், ரம்பாமற்றும் தெய்வயாணி போன்ற நடிகர்கள் நடித்திருப்பார்கள். அவ்வளவு அழகும் அற்புதமும் நிறைந்த இயற்கைஎழில்கொஞ்சும் நீர்விழ்ச்சியாக இந்த காந்தளூர் நீர்விழ்ச்சி பார்க்கப்படுகிறது.
அருவியில் குளித்து முடித்த பிறகுமறுபடியும் நாம் தங்கியுள்ள விடுதிக்கு நம்மை அழைத்து சென்றார்கள்.
மதிய உணவு :-
மதிய உணவாக சாதமும், மீன்குழம்பும், மீன் வறுவல் சுடசுட தயார்நிலையில் இருந்தது. இதோடு சாம்பார், ரசம், மோர், அப்பளம் மற்றும் பொரியல் போன்றவையும் கிடைக்கும்.
நமக்கு எது தேவையோ அதை சாப்பிடலாம். இந்தஇடத்தை பொறுத்தவரையில் உணவின் சுவை அருமையாக இருந்தது. சாப்பிட்டு முடித்த பிறகு அடுத்த இடத்தைகாண ஆர்வமாக கிளம்பிவிட்டோம்.
2.ஒத்த மலை வியூ பாயிண்ட் (Othamala View Point-off road jeep ride ):-
இந்த இடத்தை பொறுத்தவரையில் அட்வென்ச்சர் பிரியர்களுக்கு ஏற்ற இடம் ஒத்தமலை ஆப் ரோடு ஜீப் சஃபாரி. இங்குள்ள பாதையை பொறுத்தவரையில் மிகவும் கரடுமுரடான வழித்தடம்.
கொஞ்ச தூரம் மட்டுமே ரோடுநல்லதபடியாக இருக்கும். ஒத்தமலையை நோக்கி நமது ஜீப் புறப்பட்டது. இந்த கரடுமுரடான பாதையில் காட்டுக்குள்பயணம் செல்வது போன்ற உணர்வை நமக்களித்து.
ஆள்நடமாட்டமே இல்லாததால் சற்று பயமும் நமக்குள்ஏற்பட்டது.போக போக இந்த பாதையில் யானைகள் மற்றும் காட்டுமாடுகள் போன்றவை நம்மால் பார்க்கமுடியும்.
செல்லும் வழியில் ஆங்காங்கே ஓடைகள் பாய்ந்தோடுவதை காணமுடிந்தது. சில இடங்களில் ஓடைகள் மீது ஜீப்பில்பயணம் செய்யும் பொழுது புதுவித அனுபவமாக இருக்கும் .
ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு பிறகு ஜீப் செல்ல பாதைஇல்லை. ஒத்தமலை வியூ பாயிண்ட் என்பது முழுக்க முழுக்கு கரடுமுரடான பாதையில் ஜீப் சவாரி மேற்கொள்வது தான்.
வேறு எதுவும் இல்லை,ஒத்தமலை என்றதும் எதையோ பார்க்கப்போகிறோம் என நினைத்துக்கொண்டேன். அப்புறம்தான் புரிந்தது ஜீப்பில் த்ரில்லிங்கான பயணத்தை மேற்கொள்வது தான் Othamala View Point-off road jeep ride.
3. லெமன் புல் வியூ பாயிண்ட் மற்றும் ஷூடிங் பாயிண்ட் (Lemon Grass View point and shooting point):-
ஒத்தமலை வியூ பாய்ண்டை பார்த்து முடித்த பிறகு அடுத்ததாக நாம் சென்ற இடம் லெமன் கிராஸ் மற்றும் ஷுட்டிங்பாயிண்ட். இந்த இடத்தை பொறுத்தவரையில் ஜீப்பிலிருந்து இறங்கி கொஞ்ச தூரம் வரை நடந்திருப்போம்.
எலுமிச்சை பழம் வாசனை எப்படி இருக்குமோ அதுபோல கண்ணுக்கு தெரிந்த தூரம் வரைக்கும் இங்குள்ள புற்கள்எலுமிச்சை வாசனையை கொண்டது. ஒரு புல் இவ்வளவு மணம் வீசுமா ? என்ற கேள்விதான் எனக்கு தோன்றியது. பசுமையான இந்த புல்லை கொண்டு மருத்துவ குணம் கொண்ட லெமன் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.
இந்த ஆயில் தயாரிக்கும் இடமும் இங்கு தான் உள்ளது. அதையும் நம்மால் காணமுடியும். இந்த இடத்தில் இரண்டுவியூ பாயிண்ட் உள்ளது. ஒன்று மரத்தின் மேற்புத்தில் மரத்தால் கட்டப்பட்ட வீடு .
அங்கிருந்து நின்றுகொண்டுசுற்றியுள்ள லெமென் புல்லின் வாசனையையும், மறையூர் கிராமத்தின் அழகும் பார்ப்பதற்கு கண்கொள்ளாக்காட்சியாகஇருக்கும். லெமன் க்ராஸ் என்று சொல்றாங்களே நிஜமாவே புல்லில் எலுமிச்சை வாசனை வருகிறதா என ஒரு புல்லைஎடுத்து முகர்ந்து பார்த்தேன் அப்பப்பா வாசனை சும்மா கும்முனு தூக்குது.
அவ்வளவு வாசனையாக இருந்தது . அடுத்ததாக அங்கிருந்து இறங்கி 500 மீட்டர் இடைவெளியில் ஐந்து நிமிட ட்ரெக்கிங் சென்றிருப்போம், மற்றொரு வியூபாயிண்ட் இருக்கும்.
அதாவது இந்த இடத்தில் நின்றுகொண்டு பார்த்தால் சுற்றிலும் மலைகள் மற்றும் சிறு சிறுகிராமங்கள் என மிகவும் அழகாக தெரியும். இங்கு பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
4.தேன் பாறை (Honey Rock ):-
அடுத்ததாக நம்மை ஜீப்பில் அழைத்துச்சென்ற இடம் தேன் பாறை. அதாவது ஒரு பெரிய பாறை மூன்று அடுக்காகஇருக்கும். இந்த பாறையின் மீது நிறைய தேன்கூடுகள் இயற்கையாகவே இருக்கும்.
இந்த மூன்றடுக்கிலும்குறைந்தபட்சமாக நூற்றுக்கனக்கான தேன் கூடுகள் பார்த்தோம் . ஒரே இடத்தில் இவ்வளவு கூட்டை நான் பார்த்ததேஇல்லை.
இதனால் தான் இந்த இடத்தை தேன் பாறை என்று அழைக்கிறீர்களோ என தோன்றியது . ஜீப்பில்அமர்ந்தபடியும் இந்த பாறையை நம்மால் பார்க்கமுடியும்.
ஜீப் நிற்கும் இடத்திலிருந்து இரண்டு நிமிடம் நடந்துசென்றாலே போதும் பக்கத்திலேயே நூற்றுக்கணக்கான தேன்கூடுகளை பார்ப்பது ஒரு வித வியப்பை நமக்களிக்கிறது.
5. புரூட்ஸ் கார்டன் (Fruits Garden):-
தேன் பாறையை பார்த்துமுடித்த பிறகு அடுத்ததாக நாம் செல்லவிருக்கும் இடம் காந்தளூருக்கு அழகு சேர்க்கும் இடம்புரூட்ஸ் கார்டன் (Fruits Garden).
அதாவது காஷ்மீர் என்றழைக்கக்கூடிய ஆப்பிள் விளையும் இடத்தை நோக்கித்தான்பயணிக்க போகிறோம். ஆம் காந்தளூரை பொறுத்தவரையில் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்கள் அதிகம் விளைகிறது.
இந்த இடத்தை சுற்றிப்பார்க்க நுழைவுக்கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது.
கருப்பு சப்போட்டா, ஸ்ட்ராபெர்ரி, பீச், பிளாக் பெர்ரி, ப்ளம்ஸ், நெல்லிக்காய் போன்ற பழங்களும் காந்தளூரில் அதிகம் விளைகின்றது.
அதோடு காலிஃளவர், முட்டைக்கோஸ், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு மற்றும்மசாலாப்பொருள்களும் இங்கு அதிகம் பயிரடப்படுவதை காணமுடியும்.
இங்கு காய்கறி மற்றும் பழங்கள் தவிர பலவகையான வண்ணங்களில் பூக்களும் பூத்துகுலுங்கியதை பார்க்கமுடியும். இவை அனைத்தும் ஒரே இடத்தில்பார்க்கும் அனுபவம் எப்படி இருக்கும் என நினைத்துப்பாருங்கள், சொல்ல வார்த்தைகளே இருக்காது அவ்வளவுஅழகாக இருக்கும் .
இந்த சுற்றுலாவை மேற்கொண்ட பிறகு தான், மேலும் பல இடங்களை பார்க்கவேண்டும் என்ற எண்ணம் என்னுள்தோன்றியது.
இங்கு விளையும் பழங்களை நேரடியாக செடிகளிலும், மரங்களிலும் பார்க்கும்பொழுது அவ்வளவுஅழகாக இருந்தது.
வாழ்வில் நமக்கு ஏற்படும் சலிப்பு , வெறுப்பு எல்லாமே சுக்குநூறாக உடைந்து காணாமல் போகும்அவ்வளவு அழகு வாய்ந்தது இந்த “காந்தளூர் “சுற்றுலா .
வாழ்நாளில் ஒரு முறையாவது இது போன்றசுற்றுலாத்தலங்களை பார்க்க வேண்டும் என்ற தூண்டுதல் எனக்குள் வந்தது .
இந்த புரூட்ஸ் கார்டனில் சில மணிநேரம் சுற்றிப்பார்த்தோம். கொஞ்சம் கொஞ்சமாக சூரியனும் மறைய ஆரம்பித்தது. அப்படியே நம்மை அழைத்துக்கொண்டு வந்த ஜீப் நேராக நாம் தங்கியிருக்கும் விடுதியை நோக்கி சென்றது.
விளையாட்டுகள் :-
இந்த விடுதியில் பல indoor மற்றும் out door விளையாட்டுகள் பல உள்ளன. நமக்கு பிடித்த விளையாட்டுகளைநண்பர்களோடும், உறவினர்களோடும் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களோடும் விளையாடி மகிழலாம்.
அதோடு இரவுநேரத்தில் இங்குள்ள விடுதிகள் வண்ண விளக்குகளால் ஒளிரும் அழகை பார்த்துக்கொண்டே இருக்கலாம். காந்தளூரில் இரவு நேரங்களில் குளிரை கட்டுப்படுத்தும் விதமாக விடுதிகளில் தீ மூட்ட ஏற்பாடுசெய்து தருகிறார்கள்.
இந்த வெப்பத்தை நாம் உள்வாங்கும் போது உடல் இதமாக இருக்கும் அதேவேளை சுற்றுலாப்பயணிகள் ஜாலியாகவும்சந்தோசமாகவும் இருக்க டி ஜே மியூசிக் ஒலிக்கப்படுகிறது.
பாடல்களை கேட்டால் சொல்லவா வேண்டும், நம்மையும் மறந்து நடனமாட ஆரம்பித்துவிடுவோம். நடனமாடுபவரை உற்சாகப்படுத்தும் விதமாக மற்ற சுற்றுலா பயணிகள் கைதட்டி ஆரவாரம் எழுப்புவார்கள்.
இந்த சூழலில், நாம் எல்லா விதமான கவலைகளை மறந்து இன்ப வெள்ளத்தில் நீந்திக்கொண்டிருப்போம்.
அதனால் நண்பர்களே சுற்றுலா என்பது வெறுமனே சந்தோசத்திற்காகவும், கவலைகளை மறக்கும் இடமாகவும், சுற்றி ரசிக்கும் கட்சியாகவும் மட்டும் இல்லாமல் மனிதர்களுக்கு அரும்மருந்தாகவும் உள்ளது.
என்னுடைய அனுபவ ரீதியாக தான் இவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.






