3000 வருடம் பழமை வாய்ந்த தீர்த்தமலை

3000 வருடம் பழமை வாய்ந்த தீர்த்தமலை
3000 வருடம் பழமை வாய்ந்த தீர்த்தமலை

இன்று நம்முடைய கட்டுரை தொகுப்பு பல வியப்பூட்டும் உண்மைகளையும், ஆன்மீகத்தையும் ஒருசேர கொண்ட ஒரு மலை வாசஸ்தலம் , மலை அடிவாரத்தில் சிவபெருமானை வணங்கிவிட்டு மலையின் உச்சிக்கு சென்றால் குகைகள், வெள்ளி கிணறு, கோட்டைகள், சிலைகள், கல்வெட்டுகள் போன்ற ஆயிரம் ஆண்டு பழமையானவற்றை நம்மால் பார்க்கமுடியும்.

பொதுவாக ஆன்மீக சுற்றுலா சென்றால் மன அமைதி நிச்சயம் கிடைக்கும், இந்த இடம் மக்களுக்கு மன அமைதியும் , நோய் நொடிகள் தீர்க்கும் இடமாகவும் நம்பப்படுகிறது.

இன்று நாம் பார்க்கவிருக்கும் சுற்றுலாத்தலத்திற்கு சென்று அங்குள்ள தீர்த்தத்தை பருகுவதன் மூலம்  தீராத நோய்கள்   தீர்ந்து போவதாக மக்கள் நம்புகின்றன.

இந்த ஆன்மீக சுற்றுலாத்தலத்திற்கு சென்று மறைந்து கிடக்கும் பல ரகசியங்களையும், 3000 வருடம் பழமை வாய்ந்த கற்சிலைகள், மதில் சுவர்கள் , அரண்மனைகள், வெள்ளியில்  செய்த கிணறு என பலவற்றை நேரடியாக இந்த கட்டுரைவழியாக பார்க்கப்போகிறோம்.

இயற்கை அழகும், அமைதியான சுழலும் கொண்ட தீர்த்தமலை சுற்றுலா பயணிகளை ஈர்க்க காரணம் இது ஒரு ஆன்மீக ஸ்தலம் என்பதாலே . இராமாயணத்தோடு தொடர்புடைய இந்த இடத்தில்  மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம், நவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது .

பல தகவலுடன் தீர்த்தமலை ஆன்மீக சுற்றுலாதலத்தைப்பற்றி விரிவாக பார்ப்போம். ரூ.500 இருந்தால்போதும் இரண்டுபேர் தீர்த்தமலைக்கு வந்து தீர்த்திஸ்வரர் சுவாமியை வணங்கி, அங்குள்ள ஐந்து வகை தீர்த்தங்களை குடித்துவிட்டு இறைவன் அருள் பெற்றுசெல்லலாம். மலை அடிவாரத்திலிருந்து தீர்த்தஈஸ்வரர் கோவில்வரை படிக்கட்டுகள் உள்ளது.

ஆனால் மலை உச்சிக்கு செல்லவேண்டும் என்றால் கரடு முரடான சவாலான பாதைகளில் நடந்து மறைந்து கிடக்கும் உண்மைகளை பார்க்கப்போகிறோம். இந்தமலை மற்றும் இங்குள்ள தீர்த்தங்கள் மூலிகை வளம் நிறைந்தவை.

வழித்தடம்:

3000 வருடம் பழமை வாய்ந்த தீர்த்தமலை
3000 வருடம் பழமை வாய்ந்த தீர்த்தமலை

   தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள தீர்த்தமலைக்கு தர்மபுரியிலிருந்து 60 கிலோமீட்டர் , அரூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது .

திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, திருவண்ணாமலை, செங்கம்  போன்ற இடங்களிலிருந்து நேரடியாக பேருந்து வசதி உள்ளது.

மலையின் அடிவாரத்தில் தீர்த்தகீரிஸ்வரர் கோவில் உள்ளது இதன் நடை திறப்பு காலை 6 மணி முதல் 11 மணி வரை அதே போல் மாலை 4 மணி முதல் இரவு 8 மணிவரை தரிசனம் செய்யமுடியும்.  தீர்த்தகீரிஸ்வரரை  வணங்கிவிட்டு படிக்கட்டுகளின் வழியாக மலையேற ஆரம்பித்துவிடலாம்.

பலரும் கூறும் தலவரலாறு:

தீர்த்தமலைக்கு பல வரலாற்று நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன. தீர்த்தமலையை சிவபெருமானாக பாவித்து அதன் நேர் எதிர் மலையடிவாரத்தில் நந்தி சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

ராமர் ராவணனை வதம் செய்துவிட்டு அயோத்தியை நோக்கி செல்லும்போது இந்த இடத்தில் சிவபூஜை செய்யவேண்டும் என நினைத்துள்ளார்.

அதற்காக அனுமனை காசிக்கு சென்று அங்குள்ள தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு வரும்படி சொன்னதாகவும் அவர் வர காலதாமதம் ஆனதால் தன் அம்பை எடுத்து மலையில் விட்டதாகவும் அது பாறையில்பட்டு அங்கிருந்து தீர்த்தம் வந்ததாக சொல்லப்படுகிறது.

அதை எடுத்து சிவபெருமானுக்கு பூஜை செய்ததாக  புராணக்கதை. அதனாலேயே இதற்கு ராமர்தீர்த்தம் என்ற மற்றொரு பெயரும் உண்டு என்கின்றனர்.

கோவிலின் சிறப்பு:

3000 வருடம் பழமை வாய்ந்த தீர்த்தமலை
3000 வருடம் பழமை வாய்ந்த தீர்த்தமலை

இங்குள்ள ஐந்து வகை தீர்த்தங்களான அகத்தியர் தீர்த்தம், குமார தீர்த்தம், கௌரி தீர்த்தம், ராமர் தீர்த்தம், அக்னி தீர்த்தம் என இவற்றை  பருகுவதன் மூலம் தீராத நோய்களும் தீர்ந்து போவதாக கூறுகின்றனர்.

அகத்தியர் தீர்த்தம்:

பாறை இடுக்கிலிருந்து வரும் இந்த தீர்த்தத்தை பருகுவதன் மூலம் வயிற்று புண் , அல்சர் நோய் குணமாவதாகவும், ஜீரண சக்தியை அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர்.

 அக்னி தீர்த்தம்:

அக்கினி தேவனுக்கு ஏற்ப்பட்ட பெண் ஆசையை போக்கி தீர்த்தம் இந்த அக்கினி தீர்த்தம். இந்த தீர்த்தத்தை பருகுவதன் மூலம் ஆஸ்துமா,சளிபிடித்தல் , உடல் சூடு  போன்ற நோய்கள் குணமாவதாக கூறுகின்றனர்.

இராமர் தீர்த்தம்:

 மரம், செடி, கொடி என பலவற்றை கடந்து பாறை இடுக்கில் வரும் இந்த தீர்த்தம் அரியவகை தீர்த்தம் என்றும் கூறுகின்றனர்.இந்த தீர்த்தத்தில் குளிக்கும் போது ஸ்ரீ ராமஜெயம் என்று சொல்லிக்கொண்டே குளித்தால் சகல பாவங்களும் போகும் என்பது நம்பிக்கை.

குமார தீர்த்தம்:

முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் என்பதால் இதை குடிக்கும் போது கடவுள் ஞானமும், உயர்ந்த வாழ்வும் கிடைக்கும்.

கௌரி தீர்த்தம்:

இந்த தீர்த்தத்தில் குளிக்கும் போது திருமண தடை நீங்கி, திருமண பாக்கியம் கிடைக்கும்.

மக்கள் நபிக்கையோடு இந்த தீர்த்தங்களில் குளித்துவிட்டு, பருகுவதை நம்மால் கண்கூடாக பார்க்க முடியும்.

அனுமந்ததீர்த்தம் தலவரலாறு:

3000 வருடம் பழமை வாய்ந்த தீர்த்தமலை
3000 வருடம் பழமை வாய்ந்த தீர்த்தமலை

தருமபுரி மாவட்டத்தில் ஊத்தங்கரையில் உள்ள சிவபெருமானை வணங்கி அங்குள்ள தீர்த்தங்களில் குளித்தால் நலமுடன்வாழ்வோம் என்பது பலரின் நம்பிக்கை. தீர்த்தமலையில் உள்ள சிவபெருமானை வணங்குவதற்கு முன் தென்பெண்ணைஆற்றங்கரையில் அமைந்துள்ள  அனுமந்தஈஸ்வரரை வணங்க வேண்டும் என்கின்றனர். அதற்கான வரலாற்றையும் அங்குள்ளமக்கள் தெளிவாக விளக்குகின்றனர்.

ராவணனை வதம் செய்துவிட்டு வந்த ராமபிரான் சிவபெருமானுக்கு பூஜை செய்வதற்காக கங்கை தீர்த்தம் கொண்டுவரும்படிஅனுமனிடம் கூறினார். அனுமன் வர நேரம் ஆனதால் ராமர் தீர்த்தமலையில் அம்பு எய்தி ஒரு தீர்தத்தையே உருவாக்கிபூஜையை முடித்துவிட்டார்.

இதை பார்த்து தீர்த்தம் கொண்டுவந்த அனுமனுக்கு கோபம் வந்தது, கோபத்தில் அனுமன் தூக்கிஎறிந்த அந்த தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் விழுந்து அனுமன் தீர்த்தம் உருவானது.

அனுமனின் செயலை அறிந்த ராமர் அனுமனிடம் வருந்தாதே நீ எறிந்த தீர்த்தத்தில் நீர் பெருகி ஆறாக உருவாகட்டும்.

இதுஉன்பெயரிலே அனுமன் தீர்த்தம் என அழைக்கப்படும். தீர்த்தமலையை தரிசிக்க வருபவர்கள், முதலில் இத்தீர்த்தத்தில்நீராடிவிட்டே, தீர்த்தமலையில் உள்ள தீர்த்தங்களில் நீராடவேண்டும்.

அப்பொழுதுதான் அவர்கள் தீர்த்தமலையில் நீராடியபலனைப் பெறுவர் என்றார். தீர்த்தம் விழுந்த இடமே அனுமன் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.

மறைந்து கிடக்கும் தீர்த்தமலை ரகசியம்:

தீர்த்தமலை என்றால் சிவபெருமான்,ஐந்துவகை தீர்த்தம்,மலையை சுற்றியுள்ள ஏழுவகை லிங்கங்கள், நோய்நொடிகள்தீர்க்கும் இடம், அனுமந்தீர்த்தம் என ஆன்மீகம் ஒருபுறம் இருக்க தீர்த்தமலையில் சாமி தரிசனத்தை பார்த்துவிட்டு மலையேறஆரம்பித்தாள் 1000 ஆண்டு பழமையான கனிமகல்லால் செய்யப்பட்ட உச்சிப்பிள்ளையார், வெள்ளிகிணறு, பாம்பாட்டிச்சித்தர்குகை, கோட்டை என பழங்காலத்தை பறைசாற்றும் உதாரணத்தை பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் நம்மைதொற்றிக்கொள்ளும்.

தீர்த்தமலையில் தங்கம், வெள்ளி, கனிமங்கள் உள்ளதாகவும் சொல்லப்படுவதாக நம்முடைய ஆர்வத்தைதூண்டுகின்றனர்.

மலையேற ஆரம்பிக்கும்போது ஒவ்வொன்றும் எப்படியிருக்குமோ என்ற கற்பனை நம்மை தொற்றிக்கொண்டு ஒரு கற்பனைஉலகத்திற்கே நம்மை அழைத்து சென்றுவிடும்.

சரியான நடைபாதை வழிக்கூட இல்லாத இந்த மலையில் எப்படியாவதுஅனைத்தையும் பார்த்துவிடவேண்டும் என்ற ஆவலுடன் ஏறத்தொடங்கிவிட்டோம். நம்முடைய பயணத்தில் பல இடங்களில் நல்ல நறுமணம் வீசியது. மலை முழுவதும் பல மூலிகைகள்  உள்ளதுதான் இதற்கு காரணமாக இருக்கமுடியும். அதை சுவாசித்து கொண்டு புத்துணர்ச்சியுடன் மலையேறினோம்.

மலையின் மீது ஏறிவிட்டோம் இருபுறங்களும் பள்ளத்தாக்குகள் நடுவே மலை, பார்ப்பதற்கே சற்று பயமாகத்தான் இருந்தது. செங்குத்தான அந்தமலையின் பக்கவாட்டில் தான் நாம் பார்க்கவேண்டிய பல அதிசயங்கள் உள்ளது. விடாது தொடர்ந்த நம்பயணம், பயணத்தின் முதல் வெற்றியாய்  வெள்ளிக்கிணறு.

வெள்ளிக்கிணறு:

நம்முடைய ஆதித்தமிழர் வாழ்ந்ததற்கு அடையாளமாக இந்த வெள்ளிக்கிணற்றை பார்க்கிறோம்.பல அடி ஆழம்கொண்டஇந்த கிணற்றின் அடிப்பகுதியில் வெள்ளி உருக்கி ஊற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

சீலநாயக்கன், கெட்டிமுதலியார்போன்ற சிற்றரசர்கள் தாங்கள் போர்படைகளை தங்கவைக்கும் போது நீராதாரத்திற்கு இந்த வெள்ளிக்கிணறுகட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இன்று அந்த வெள்ளிக்கிணறு பழுதடைந்து கற்களால் மூடப்பட்டிருக்கிறது. இருப்பினும் அந்த கிணற்றை பார்க்கும்போது நாமே பழங்காலத்திற்கு சென்றது போன்ற ஒரு உணர்வு வந்துவிட்டது.

சீலநாயகன் கோட்டை:

3000 வருடம் பழமை வாய்ந்த தீர்த்தமலை
3000 வருடம் பழமை வாய்ந்த தீர்த்தமலை

வெள்ளிக்கிணற்றுக்கு அடுத்தபடியாக நாம் பார்த்தது சிலநாயகன் கோட்டை. இந்த கோட்டையில் பல இடங்களில் வீரர்கள் கண்காணிப்பு செய்ய கருங்கற்களால் ஆன மதில் சுவர்கள் கட்டப்பட்டு இருந்ததை  பார்க்கமுடிந்தது.

16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழ சிற்றரசரான கெட்டிமுதலியார்  கட்டிய சீலநாயகன் கோட்டையை நாம் அடைய வெள்ளி கிணற்றிலிருந்து கரடுமுரடான பாதையில் செடி கொடி, முட்புதர்கள் இவற்றையெல்லாம் கடந்து நாம் செல்லவேண்டும். பார்க்கமுடிந்தது.

சீதைந்த கருங்கற்களால் ஆன கோட்டை மதில் சுவர்கள், பதுங்கு குழிகள்,செங்கற்களால் ஆன கோட்டை சுவர்கள் ஆச்சரியமாக இருந்தது.கண்காணிப்பு கோபுரமாக  இந்த கோட்டை பார்க்கப்பட்டது.

 தங்கம் இருப்பது உறுதிசெய்ப்பட்ட மலை:

இங்குள்ள பாறைகளில் தங்கம், வெள்ளி, கனிமம் இருப்பது ஆராய்ச்சில் உறுதிசெய்யப்பட்ட போதும் இதை எடுக்காததற்கு இரண்டு காரணங்களை சொல்கின்றனர்.

பொதுமக்களால் இந்த மலைப்பகுதி சேதப்படுத்தப்படும் என்றும், இங்குள்ள கனிம வளங்களைவிட அதை எடுப்பதற்கு ஆகும் தொழில்நுட்ப செலவு அதிகம் என்பதால் இதை எடுக்காமல் இருப்பதாக கூறுகின்றனர் .

கனிமவளங்கள் நிறைந்த தீர்த்தமலை :

1800இல்  சேலத்தில் லெவோன் என்ற ஆங்கிலேய ஆட்சியாளர் தீர்த்தமலையில் கனிமங்கள் இருப்பதை ஆராச்சி செய்து ஆவணப்படுத்தியுள்ளார்.

இங்கு சுரங்கம் இருப்பதை உறுதிசெய்தார், அதன் பின் வந்த ஆட்சியாளர்கள் அதில்  அக்கறைகாட்டவில்லை.

தற்போது கேட்பாறற்று கிடக்கும் இந்த தீர்த்தமலை தொல்லியல் துறை வசம் செல்லவேண்டும், ஆராச்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.

சப்தகன்னிகள்:

தீர்த்தமலையின் அடுத்த அதிசயம் இரு பாறைகளுக்கு நடுவே ஆட்கள் செல்லமுடியாத இடத்தில் செதுக்கப்பட்டிருந்த சிலைகள்.

பாறையின் பக்கவாட்டில் மனிதர்கள் செல்லமுடியாத இடத்தில் பழந்தமிழர்கள் வழிபட்ட சப்தகன்னிகள் சிலைகள். இந்த சிலைகள் எப்படி செதுக்கப்பட்டது என்பது நம்மை சிந்திக்கவைக்கிறது.

உச்சிப்பிள்ளையார்:

தீர்த்தமலை கடல்மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் உள்ளது.கரணம் தப்பினால் மரணம் என்பது போல பயத்தின் உச்சக்கட்டத்தில் மலையின் உச்சியில் கனிம கல்லில் செய்த பிள்ளையார் சிலை உள்ளது.

சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இந்த சிலை மலை உச்சியில் வைத்த காரணம் போர்செல்லும் முன் வணங்கிவிட்டு செல்லவும், வெற்றியை பறைசாற்றும் இடமாகவும் பார்க்கப்பட்டது என கூறுகின்றனர்.

வேகமாக வீசும் காற்று மலை உச்சியில் சிலை இது எப்படி சாத்தியம் என்பதுபோல நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

கரடு முரடான பாதையில் மலை உச்சியில் கனிம கல்லால் ஆன பிள்ளையார்சிலை, மனிதர் நுழையமுடியாத பாறை இடுக்கில்செதுக்கப்பட்ட சிலைகள், மன்னர்களின் கோட்டை, பாதுகாப்பு நிற்கும் படைவீரர்களுக்கு கருங்கல்லில் கட்டிய மதில் சுவர், வெள்ளி கிணறு என ஆபத்தும், ஆச்சர்யமும் நிறைந்த இந்த மலையில் கொட்டிக்கிடக்கும் வளங்களும், மூலிகை வாசமும்.

மலையடிவாரத்தில் சிவபெருமான் கோவில், தீர்த்தங்கள், புராண கதைகள் என பல கேள்விக்கு பதில் தீர்த்தமலை.

இங்குசிவபெருமானை வணங்கி அருளை பெற்று தீர்த்தத்தில் குளித்து நோய்கள் நீங்கி நம் உடலுக்கும், மனதிற்கும் அமைதியையும், புத்துணர்ச்சியையும் வழங்கும் ஒரு இடம்.

ராமர் அருள் பெறுவதற்கு முன்னர் நாம் முதலில் அனுமன் அருள் பெறவேண்டும் எனசொல்லக்கூடிய புனித ஸ்தலம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top