கேரளாவில் உள்ள குட்டி காஷ்மீர் – காந்தளூர்
x
இன்பமும் துன்பமும் கலந்ததுதான் மனித வாழ்க்கை. இந்த இரண்டில் எது அதிகமாக இருந்தாலும், நாம் வாழும் வாழ்க்கையின் மீது ஒருகட்டத்தில் சலிப்பும் வெறுப்பும் தோன்றிவிடும்.
அந்த நேரங்களில் எல்லாவற்றையும் மறந்து, சில நாட்களாவது மனநிம்மதியாக வாழ வேண்டும் என்ற ஆசை பலருக்கும் ஏற்படும். ஆனால் அந்த நிம்மதியை எங்கு தேடுவது என்று தெரியாமல் நாமே நம்முள் சுற்றிக்கொண்டிருப்போம்.
ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப்படி அந்த நிம்மதியை தேடுகிறார்கள். சிலர் தனிமையில் நேரம் செலவிட விரும்புவார்கள். சிலர் நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக நேரம் கழிப்பார்கள். சிலர் இசை, ஆடல், பாடல் போன்றவற்றில் மனதை செலுத்துவார்கள். இன்னும் சிலர் கோவில், குளம் போன்ற அமைதியான இடங்களுக்கு சென்று மன அமைதியை தேடுவார்கள்.
ஆனால் இந்த எல்லா அனுபவங்களும் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கிடைத்தால் எப்படி இருக்கும்? அந்த எண்ணமே மனதில் ஒரு தனி மகிழ்ச்சியை உருவாக்குகிறது.
அப்படி அனைத்தும் ஒருசேர கிடைக்கும் இடம் தான் சுற்றுலா. உண்மையில் சுற்றுலா என்றாலே நம்முடைய அன்றாட வாழ்க்கையிலிருந்து சிறிது நேரம் விலகி, புதிய இடங்களை சுற்றிப்பார்த்து மனதை புத்துணர்ச்சியடையச் செய்வது தான்.
“எனக்கு ஊர் சுற்றுவது பிடிக்காது” என்று சொல்லுபவர்கள் அரிது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்றாக ஊர் சுற்றுவது மாறிவிட்டது.
சுற்றுலாவிற்கு குறிப்பிட்ட நேரம் என்று ஒன்றும் இல்லை. சில இடங்கள் பகலில் மிகவும் அழகாக இருக்கும். சில இடங்கள் இரவில் தான் உண்மையான அழகை காட்டும். சில இடங்கள் காலை, மாலை என்று எந்த நேரத்தில் சென்றாலும் கண்கொள்ளாக் காட்சிகளை தரும்.
அப்படிப்பட்ட ஒரு பயணத்திற்காக நானும் காத்திருந்தேன். சலிப்பாக ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையிலிருந்து சிறிது நேரம் விலகி, மனதை அமைதிப்படுத்த ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது.
ஆனால் எங்கு செல்லலாம் என்ற கேள்வி மனதில் தொடர்ந்து தோன்றிக் கொண்டே இருந்தது. அதோடு இன்னொரு சிந்தனையும் இருந்தது — குறைந்த செலவில் நிறைந்த மனநிம்மதி தரும் ஒரு இடம் எது? சில நாட்கள் யோசித்த பிறகு நான் தேர்ந்தெடுத்த இடம் கேரளா.
குட்டி காஷ்மீர்
கேரளா என்றாலே நம் மனதில் தோன்றுவது பசுமை நிறைந்த தென்னை மரங்கள், அழகான கடற்கரைகள், அடர்ந்த காடுகள், பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள், மேகங்களைத் தொட்டுக் கொண்டிருக்கும் மலைச் சிகரங்கள். இவை அனைத்தும் கண்ணுக்கு குளிர்ச்சி தரும் இயற்கை காட்சிகளாக இருக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் கேரளாவின் ஆயுர்வேத மருத்துவம், உலகப்புகழ் பெற்ற மசாலா பொருட்கள், பாரம்பரிய கதகளி நடனம் போன்றவை அந்த மாநிலத்தின் தனித்துவமான அடையாளங்களாக உள்ளன.
இயற்கையின் அழகை ரசிக்க உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப்பயணிகள் கூட்டம் கூட்டமாக கேரளாவை நோக்கி வருவது சாதாரணமாகவே பார்க்கப்படும் காட்சி.
அவ்வளவு சிறப்புகள் கொண்ட அந்த மாநிலத்தில் நான் தேர்ந்தெடுத்த இடம் “குட்டி காஷ்மீர்” என்று அழைக்கப்படும் காந்தளூர். மலைப்பகுதியின் இயற்கை அழகும் அமைதியான சூழலும் காரணமாக இந்த இடம் சுற்றுலாப்பயணிகளை அதிகமாக கவர்கிறது.
எப்போது அந்த பயணத்தை தொடங்கலாம் என்று யோசித்தபோது, இன்னொரு யோசனை தோன்றியது. சுட்டெரிக்கும் கோடை வெயிலிலிருந்து கொஞ்சம் தப்பிக்க வேண்டுமென நினைத்து, ஏப்ரல் மாதத்தை நான் தேர்வு செய்தேன்.
அதனால் ஏப்ரல் மாத இறுதியில் காந்தளூருக்கு ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். அந்த முடிவு எடுத்த அந்த நிமிஷத்திலேயே என் மனதில் ஒரு புதிய உற்சாகம் பிறந்தது.
சலிப்பிலிருந்து ஒரு பயணம் – கேரளாவின் காந்தளூர் நோக்கி

இயற்கை அழகுக்கும் அருவிகளுக்கும் மட்டும் காந்தளூர் சொந்தமல்ல. கடல்மட்டத்திலிருந்து சுமார் ஐந்தாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைப்பகுதி, இயற்கையாகவே விளையும் பல்வேறு பழங்களுக்கும் காய்கறிகளுக்கும் பெயர் பெற்ற இடமாகும்.
இங்கு வளரும் பயிர்களின் தரமும் சுவையும் தனித்துவமானவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
காந்தளூரை “குட்டி காஷ்மீர்” என்று அழைப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் ஆப்பிள் பயிரிடுதல். ஆம், இந்தியாவில் காஷ்மீருக்கு அடுத்தபடியாக இயற்கையாக ஆப்பிள் பயிரிடப்படும் இடமாக காந்தளூர் குறிப்பிடப்படுகிறது.
அதனால் தான் இந்த அழகான மலைப்பகுதி அன்பாக “குட்டி காஷ்மீர்” என்று அழைக்கப்படுகிறது.
நான் திட்டமிட்டது போலவே ஏப்ரல் மாதமும் வந்து சேர்ந்தது. நாட்கள் நெருங்க நெருங்க என் மனதில் ஒரு விதமான உற்சாகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
இயற்கையின் நடுவே சில நாட்கள் கழித்து, அருவிகளின் ஆர்ப்பரிக்கும் சத்தத்தையும் அமைதியான சூழலையும் எப்போது அனுபவிப்போம் என்ற எண்ணம் மனதில் சுற்றிக்கொண்டே இருந்தது.
ஆனால் ஒருபுறம் ஒரு சிறிய பயமும் இருந்தது. கோடைக்காலத்தில் வெளியில் செல்வதே சிரமமாக இருக்கும் நிலையில், இந்த நேரத்தில் சுற்றுலா சென்றால் எப்படி இருக்கும் என்ற சந்தேகம் மனதில் தோன்றியது.
ஆனால் அந்த பயம் அனைத்தும் காந்தளூரை அடைந்தவுடன் மறைந்து போனது. அங்கு இறங்கிய உடனே வீசத் தொடங்கிய குளிர்ந்த மலைக்காற்று என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கோடைக்காலத்திலேயே இவ்வளவு குளிர்ச்சியாக இருந்தால், குளிர்காலத்திலும் பனிக்காலத்திலும் இந்த இடம் எப்படி இருக்கும் என்று நினைத்தபோது மனம் மகிழ்ச்சியில் நிரம்பியது.
உண்மையில் கேரளாவில் உள்ள காந்தளூர் இயற்கை அன்னையின் வரப்பிரசாதமாக சொல்லக்கூடிய இடம். சுற்றிலும் உயர்ந்த மலைக்குன்றுகள், பசுமையான காடுகள், பல்வேறு அருவிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் — இவை அனைத்தும் அந்த இடத்திற்கு ஒரு தனித்துவமான அழகை அளிக்கின்றன.
குறிப்பாக நீர்வீழ்ச்சிகள் அதிகமாக காணப்படும் இடங்களில் ஒன்றாக காந்தளூர் உள்ளது. சில நேரங்களில் அடர்ந்த காடுகளுக்குள் ட்ரெக்கிங் செய்து சென்ற பிறகே அந்த நீர்வீழ்ச்சிகளை அடைய முடியும்.
ஆனால் அந்த சாகசம் நிறைந்த நடைபயணம் முடிவில் கிடைக்கும் காட்சி, உண்மையிலேயே கண்களுக்கு விருந்தாக இருக்கும்.
அதனால் தான் சாகசத்தை விரும்புபவர்களுக்கு காந்தளூர் ஒரு சிறந்த இடமாக கருதப்படுகிறது.
இன்னும் அதிகமாக பிரபலமான சுற்றுலா தலமாக இல்லாவிட்டாலும், காந்தளூரில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன. அதே சமயம் இங்கு இருக்கும் இயற்கை அழகுகள் காரணமாக, இப்போது சுற்றுலாப்பயணிகளை அதிகமாக ஈர்க்கும் இடமாகவும் மாறி வருகிறது.
காந்தளூரை சுற்றியுள்ள பகுதிகளில் பெயர் தெரியாத பல அருவிகளும் நீர்வீழ்ச்சிகளும் மறைந்து கிடக்கின்றன. அவற்றை கண்டுபிடித்து ரசிப்பதே அந்த பயணத்தின் உண்மையான சுகமாக இருக்கும்.

காந்தளூர் செல்லும் வழி – ஒரு அழகான மலைப் பயணம் 🏞️
தமிழ்நாடு – கேரளா எல்லைப்பகுதியில் அமைந்துள்ள அழகான மலைப்பகுதி தான் காந்தளூர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை நகரத்திலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது.
நான் காந்தளூருக்கு செல்ல திட்டமிட்டபோது, முதலில் அடைய வேண்டிய முக்கியமான இடம் உடுமலைப்பேட்டை என்பதையே அனைவரும் சொன்னார்கள். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வர பேருந்து வசதிகள் உள்ளன. அதேபோல் தொலைதூரத்தில் இருந்து வருபவர்கள் ரயில் மூலம் சென்னை போன்ற நகரங்களில் இருந்து அருகிலுள்ள நிலையங்களை அடைந்து, அங்கிருந்து உடுமலைப்பேட்டையை அடையலாம்.
அதனால் எங்கிருந்து வந்தாலும் முதலில் உடுமலைப்பேட்டையை அடைவதே காந்தளூர் பயணத்தின் முதல் படி.
உடுமலைப்பேட்டையை அடைந்த பிறகு, அங்கிருந்து காந்தளூருக்கு செல்ல இரண்டு வழிகள் உள்ளன. சாகசம் நிறைந்த பயணத்தை விரும்புபவர்கள் ஜீப் வாகனங்களில் மலைப்பாதையை கடந்து செல்லலாம்.
இல்லையெனில் குறைந்த செலவில் பயணம் செய்ய விரும்புபவர்கள் பேருந்து வசதியையும் பயன்படுத்தலாம்.
நான் உடுமலையிலிருந்து பயணத்தை தொடங்கியபோது, அந்த சாலை என்னை மெல்ல மெல்ல மலைப்பகுதியை நோக்கி அழைத்துச் செல்ல ஆரம்பித்தது.
உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் சாலையில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, மறையூர் என்ற ஒரு அழகான இடம் வந்தது.
அங்கு சென்றதும் இடதுபுறமாக ஒரு சாலை மலைப்பகுதியை நோக்கி கிளைபிரிகிறது.
அந்த பாதையை பின்தொடர்ந்து செல்லும்போது மெதுவாக ஒரு மலையேற்றப் பாதை தொடங்குகிறது. அந்த சாலையில் மேலே மேலே ஏறிக்கொண்டே செல்லும் போது சுற்றிலும் பசுமை நிறைந்த மலைகள் நம்மை வரவேற்க ஆரம்பிக்கும்.
அவ்வாறு மலைப்பாதையை கடந்து சென்ற பிறகு தான் நான் இயற்கை அழகால் சூழப்பட்ட அந்த அற்புதமான மலைப்பகுதியான காந்தளூரை அடைந்தேன்.
இரண்டு நாள் காந்தளூர் சுற்றுலா அனுபவம் 🏕️
காந்தளூரை அடைந்த பிறகு அங்கு சுற்றுலாப்பயணிகளுக்காக பல வகையான தங்கும் வசதிகள் இருப்பதை பார்த்தேன். டென்ட் ஸ்டே (Tent Stay), ரூம்ஸ், மட் ஹவுஸ் (Mud House) என பல்வேறு வகையான விடுதிகள் அங்கு அமைக்கப்பட்டிருந்தன.
நான் சென்றபோது, அங்குள்ள ஒரு சிறிய மலையின் உச்சியில் அமைந்திருந்த டென்ட் கேம்பில் தான் தங்க முடிவு செய்தேன்.
இயற்கையின் நடுவே தங்கும் அனுபவம் கிடைக்கும் என்பதால் அது எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது.
அந்த விடுதியின் சிறப்பு என்னவென்றால், அதைச் சுற்றி பார்க்கும் இடமெல்லாம் மலைகள், பள்ளத்தாக்குகள், அருவிகள், நீர்வீழ்ச்சிகள் என கண்களுக்கு குளிர்ச்சி தரும் காட்சிகள் தான். அந்த சூழலை பார்த்தவுடன் மனம் உடனே அமைதியாகிவிடுகிறது.
அங்கு குறைந்த கட்டணத்தில் பல கூடார விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கூடாரத்திலும் குறைந்தபட்சமாக நான்கு நபர்கள் வரை தங்கும் வசதி உள்ளது.
உண்மையில் அது ஒரு பெரிய டென்ட் கேம்ப் போலவே அமைந்திருந்தது.
“குடும்பத்தோடு வருபவர்களுக்கு ஏற்ற தங்கும் வசதி இருக்குமா?” என்ற கேள்வி இயல்பாகவே எழலாம். ஆனால் அதற்கும் இங்கு நல்ல ஏற்பாடுகள் உள்ளன.
இயற்கை சூழலுடன் பொருந்தும் வகையில் அழகாக கட்டப்பட்ட மட் ஹவுஸ் (மண் வீடுகள்) குடும்பத்தோடு வருபவர்களுக்கு சிறந்த தங்கும் இடமாக இருக்கின்றன.
நான் இந்த பயணத்திற்கு தனியாகவே வந்திருந்ததால், எனக்கு அந்த டென்ட் கேம்ப் அனுபவமே போதுமானதாக இருந்தது.
அன்று காலை சுமார் 11 மணியளவில் நான் காந்தளூரில் அமைந்திருந்த அந்த டென்ட் கேம்பை அடைந்தேன். அங்குள்ள விடுதியில் செக்-இன் செய்யும் நடைமுறைகளை முடித்த பிறகு, என்னுடன் கொண்டுவந்திருந்த பொருட்களை அந்த கூடாரத்தில் வைத்துவிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்தேன்.
இந்த சுற்றுலாவிற்கு நான் தேர்வு செய்தது “இரண்டு பகல் – ஒரு இரவு” என்ற பேக்கேஜ். அந்த பேக்கேஜில் தங்கும் வசதியுடன் சேர்த்து சுற்றுலா அனுபவங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த டென்ட் கேம்பில் அதிகபட்சமாக ஆறு நபர்கள் வரை தங்கும் வசதி இருந்தது. இயற்கையின் நடுவே, மலைகளின் குளிர்ந்த காற்றை உணர்ந்தபடி அந்த கூடாரத்தில் தங்கப்போகிறேன் என்ற எண்ணமே எனக்கு ஒரு புதிய உற்சாகத்தை கொடுத்தது.
கேரளாவில் உள்ள குட்டி காஷ்மீர் காந்தளூர்
காந்தளூரில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் 🏞️
காந்தளூரில் தங்கியிருந்த விடுதியில் இருந்து சுற்றுலாப்பயணிகளுக்காக ஜீப் வசதி செய்து கொடுக்கப்படுவது எனக்கு மிகவும் வசதியாக இருந்தது. அந்த ஜீப்பிலேயே அங்குள்ள முக்கியமான இடங்களை சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அன்று காலை நான் தங்கியிருந்த விடுதியிலிருந்து அந்த ஜீப் புறப்பட்டபோது, என்னுடன் இன்னும் சில சுற்றுலாப்பயணிகளும் சேர்ந்து பயணம் தொடங்கினோம்.
அனைவரின் முகத்திலும் ஒரு புதிய இடத்தை காணப்போகும் ஆர்வம் தெளிவாக தெரிந்தது.
காந்தளூர் சுற்றுலாவை பொறுத்தவரையில் பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன. அந்த நாள் நாங்கள் செல்ல இருந்த முக்கியமான இடங்கள் பின்வருமாறு:
-
காந்தளூர் தனியார் நீர்வீழ்ச்சி (Private Water Falls)
-
ஒத்தமலை View Point (Othamala View Point)
-
லெமன் கிராஸ் View Point & Shooting Point
-
தேன் பாறை (Honey Rock)
-
பழத் தோட்டம் – Fruits Garden
இந்த இடங்களை ஒன்றன் பின் ஒன்றாக சுற்றிப்பார்க்க திட்டமிட்டு நாங்கள் பயணத்தை தொடங்கினோம்.
காலை சுமார் 11 மணியளவில் எங்களின் ஜீப் பயணம் ஆரம்பமானது. மலைப்பாதையில் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்த ஜீப்பில் இருந்து சுற்றியுள்ள பசுமையான காட்சிகளை ரசித்தபடி நாங்கள் முன்னேறிக் கொண்டிருந்தோம்.
எங்களை முதலில் அழைத்து சென்ற இடம் ஒரு அழகான நீர்வீழ்ச்சி பகுதி. அங்கு சென்றதும் அந்த இடத்தின் இயற்கை அழகை பார்த்தவுடன் மனம் மகிழ்ந்தது. அங்கே இருந்தவர்கள் பலரும் அந்த நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.
அந்த காட்சியை பார்த்தவுடன் நானும் அந்த நீர்வீழ்ச்சியில் சென்று குளிக்கலாம் என்று முடிவு செய்தேன்.
காந்தளூர் நீர்வீழ்ச்சி
நாங்கள் சென்ற ஜீப் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே செல்ல முடிந்தது. கடைசியாக ஜீப் நின்ற இடம் ஒரு அழகான வியூ பாயிண்ட். அங்கு நின்றபோது கண்கள் எட்டிய தூரம் வரை பசுமையாக பரந்து விரிந்த காடுகள், சிறிய கிராமங்கள் என இயற்கையின் அழகு கண்களுக்கு விருந்தாக இருந்தது.
அந்த இடத்தில் நின்று புகைப்படங்கள் எடுக்கலாம் என்று தோன்றினாலும், எனக்கு அந்த நேரத்தில் மனதில் இருந்த ஒரே எண்ணம் – காந்தளூர் நீர்வீழ்ச்சியை விரைவாக பார்க்க வேண்டும் என்பதுதான். அதனால் புகைப்படம் எடுக்கவே நினைக்கவில்லை.
அந்த வியூ பாயிண்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் ட்ரெக்கிங் சென்றால் தான் அந்த நீர்வீழ்ச்சியை அடைய முடியும். அதனால் நானும் என்னுடன் வந்த மற்ற சுற்றுலாப்பயணிகளும் சேர்ந்து அந்த காட்டுப்பாதையில் நடைபயணம் தொடங்கினோம்.
பாதையில் நடந்தபோது சுற்றிலும் இருந்த பசுமையான மரங்களையும் செடி கொடிகளையும் ரசித்தபடி மெதுவாக முன்னேறினோம். அந்த நடைபயணம் மலையின் மேல் பகுதியில் இருந்து மெதுவாக கீழே இறங்கும் பாதையைப் போன்ற உணர்வை அளித்தது.
சில நேரம் நடந்தபோது தூரத்தில் இருந்து தண்ணீர் கொட்டும் சத்தம் காதில் கேட்க ஆரம்பித்தது. அதைக் கேட்டவுடன் நாம் நீர்வீழ்ச்சிக்கு அருகில் வந்து விட்டோம் என்று புரிந்தது.
ஆனால் ஒரு சிறிய சந்தேகம் மனதில் இருந்தது. ஏனெனில் நான் சென்றது ஏப்ரல் மாதம். அந்த நேரத்தில் அருவியில் தண்ணீர் இருக்கும் தானா? அல்லது வற்றிப் போயிருக்கும் தானா? என்ற எண்ணம் மனதில் தோன்றியது.
இத்தனை தூரம் ட்ரெக்கிங் செய்து வந்து, இறுதியில் தண்ணீர் இல்லாமல் இருந்தால் என்ன செய்வது என்ற கவலையும் இருந்தது.
ஆனால் சில நிமிடங்களில் அந்த சந்தேகம் அனைத்தும் மறைந்து போனது. முன்புறம் பார்த்தபோது ஒரு அழகான நீர்வீழ்ச்சி ஆர்ப்பரித்து கொட்டிக்கொண்டிருந்தது. அதையும் விட மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் தண்ணீர் நல்ல அளவில் இருந்தது.
Private Water Falls அனுபவம்
அருவியில் இருந்து விழும் தண்ணீரின் சத்தமும், அதைச் சுற்றி இருந்த பசுமையான காடுகளும் அந்த இடத்தை மிகவும் அழகாக மாற்றியிருந்தது. உண்மையில் அந்த காட்சி நம்மை காந்தம் போல கவர்ந்திழுக்கும்.
அங்கு ஏற்கனவே சில சுற்றுலாப்பயணிகள் குளித்துக்கொண்டிருந்தார்கள். சிலர் நண்பர்கள் குழுவாக வந்திருந்தனர், சிலர் குடும்பத்தோடு வந்திருந்தனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அந்த இடத்தில் மகிழ்ச்சியாக இருந்ததை பார்க்க முடிந்தது.
நான் சென்றபோது ஒரு குடும்பம் – அப்பா, அம்மா மற்றும் இரண்டு குழந்தைகள் – அந்த அருவியில் குளித்துக்கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்பதால் நானும் என்னுடன் வந்த நண்பர்களும் அருகில் இருந்த ஒரு பெரிய பாறையின் மீது அமர்ந்து காத்திருந்தோம்.
அவர்கள் குளித்து முடித்த பிறகு தான் நாங்கள் தண்ணீரில் இறங்கி விளையாட ஆரம்பித்தோம். அருவியில் தண்ணீர் நல்ல அளவில் இருந்ததால் குளிப்பது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை அந்த அருவியில் நேரத்தை கழித்தோம். நண்பர்களுடன் இப்படி ஒரு இயற்கை இடத்தில் குளிப்பது உண்மையில் வேற லெவல் அனுபவமாக இருந்தது.
இந்த இடத்தில் பல திரைப்படங்களின் காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ் திரைப்படமான “நினைத்தேன் வந்தாய்” படத்தின் சில காட்சிகள் இங்கு எடுக்கப்பட்டதாக அங்குள்ளவர்கள் கூறினார்கள். அந்த படத்தில் விஜய், ரம்பா, தேவயானி போன்ற நடிகர்கள் நடித்திருந்தார்கள்.
அவ்வளவு அழகும் இயற்கை எழிலும் நிறைந்த ஒரு இடமாக தான் இந்த காந்தளூர் நீர்வீழ்ச்சி இருக்கிறது.
அருவியில் குளித்து முடித்த பிறகு மீண்டும் ஜீப்பில் ஏறி நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பினோம்.
மதிய உணவு 🍽️
விடுதிக்கு வந்தபோது அங்கு மதிய உணவு தயாராக இருந்தது. சுடச்சுட பரிமாறப்பட்ட சாதத்துடன் மீன் குழம்பு, மீன் வறுவல் ஆகியவை மிகவும் ருசியாக இருந்தது.
அதோடு சேர்த்து சாம்பார், ரசம், மோர், அப்பளம் மற்றும் பொரியல் போன்றவையும் வழங்கப்பட்டன. யாருக்கெது பிடித்ததோ அதை எடுத்துக் கொண்டு சாப்பிடலாம்.
இந்த இடத்தில் சாப்பிட்ட உணவின் சுவை உண்மையில் மிகவும் அருமையாக இருந்தது. இயற்கையின் நடுவே சாப்பிடும் அந்த உணவு இன்னும் ருசியாக இருந்தது.
உணவு முடிந்ததும் சிறிது நேரம் ஓய்வு எடுத்தோம். பிறகு காந்தளூரில் இருக்கும் அடுத்த சுற்றுலா இடத்தை பார்க்கும் ஆர்வத்தில் மீண்டும் பயணத்தை தொடர தயாரானோம்.
ஒத்தமலை View Point – Off Road Jeep Ride சாகசம் 🚙🌄
காந்தளூரில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று ஒத்தமலை View Point. ஆனால் இந்த இடத்தின் சிறப்பு சாதாரண View Point அல்ல. இது முழுக்க முழுக்க Off-Road Jeep Ride அனுபவத்திற்காக பிரபலமான இடம்.
இந்த பாதையைப் பொறுத்தவரையில் சாலை மிகவும் கரடுமுரடானது. ஆரம்பத்தில் கொஞ்ச தூரம் மட்டும் சாலை சீராக இருக்கும்.
அதற்குப் பிறகு மலைப்பாதை முழுவதும் கற்கள், பள்ளங்கள் மற்றும் மண் வழித்தடமாக மாறிவிடுகிறது.
நாங்கள் மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் ஜீப்பில் ஏறி ஒத்தமலை நோக்கி பயணத்தை தொடங்கினோம். ஜீப் மெல்ல அந்த கடினமான பாதையில் நகர ஆரம்பித்ததும், அது ஒரு சாதாரண பயணம் இல்லை என்பதே உடனே புரிந்தது.
அந்த மலைப்பாதையில் செல்லும் போது, நாங்கள் காட்டுக்குள் பயணம் செய்வது போன்ற உணர்வு ஏற்பட்டது.
சுற்றிலும் அடர்ந்த மரங்கள், அமைதியான சூழல் – மனிதர்கள் நடமாட்டமே இல்லாத அந்த பாதை சற்று பயத்தையும் தரியது.
ஆனால் அதே நேரத்தில் அந்த அனுபவம் மிகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.
அங்குள்ளவர்கள் கூறியதுபோல், சில நேரங்களில் இந்த பகுதிகளில் யானைகள் மற்றும் காட்டுமாடுகள் போன்ற விலங்குகளையும் பார்க்க முடியும் என்று தெரிந்தது.
அதனால் அந்த வழியில் பயணம் செய்யும்போது இயற்கையின் நடுவே இருப்பது போன்ற உணர்வு அதிகமாக இருந்தது.
பயணத்தின் போது வழியெங்கும் சிறிய ஓடைகள் பாய்ந்து ஓடுவது கண்ணில் பட்டது. சில இடங்களில் அந்த ஓடைகளின் மீது ஜீப் கடந்து செல்லும் போது அது ஒரு புதுவிதமான சாகச அனுபவமாக இருந்தது.
சில தூரம் சென்ற பிறகு அந்த பாதை இன்னும் கடினமாக மாறியது. ஒரு கட்டத்திற்கு பிறகு ஜீப் செல்ல சீரான பாதையே இல்லை என்று சொல்லலாம்.
அப்போது தான் எனக்கு புரிந்தது — ஒத்தமலை View Point என்றால் ஒரு குறிப்பிட்ட காட்சியை பார்க்கும் இடம் அல்ல. மாறாக, அந்த கரடுமுரடான மலைப்பாதையில் ஜீப்பில் சாகசமான Off-Road பயணம் செய்வதே இந்த இடத்தின் முக்கிய அனுபவம்.
நான் ஆரம்பத்தில் “ஒத்தமலை” என்ற பெயரை கேட்டபோது அங்கு ஒரு பெரிய காட்சி அல்லது மலை உச்சி இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் பின்னர் புரிந்தது – இந்த இடத்தின் உண்மையான சுவாரஸ்யம் அந்த த்ரில்லான ஜீப் சவாரியில்தான் இருக்கிறது.
லெமன் கிராஸ் View Point & Shooting Point 🍋🌿
ஒத்தமலை Off-Road ஜீப் சவாரி அனுபவத்தை முடித்த பிறகு, அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் லெமன் கிராஸ் View Point மற்றும் Shooting Point.
இந்த இடத்தை அடைந்ததும் ஜீப்பிலிருந்து இறங்கி, சிறிது தூரம் வரை நடந்து செல்ல வேண்டி இருந்தது. அந்த பாதையில் நடந்துகொண்டிருந்தபோது ஒரு விசித்திரமான அனுபவம் ஏற்பட்டது.
எலுமிச்சை பழத்தின் வாசனை எப்படி இருக்கும் தெரியுமா? அதே மாதிரி ஒரு மணம் காற்றில் பரவிக் கொண்டிருந்தது. முதலில் அது எங்கிருந்து வருகிறது என்று புரியவில்லை.
பிறகு தான் தெரிந்தது – சுற்றிலும் பரந்து விரிந்திருந்த லெமன் கிராஸ் (Lemon Grass) புல்களிலிருந்தே அந்த மணம் வீசியது.
கண்ணுக்கு தெரிந்த தூரம் வரை பசுமையாக பரந்து விரிந்திருந்த அந்த புல்கள் அனைத்தும் எலுமிச்சை மணத்தை வீசிக் கொண்டிருந்தது. “ஒரு புல் இவ்வளவு மணம் வீசுமா?” என்ற ஆச்சரியம் எனக்கு ஏற்பட்டது.
அங்குள்ளவர்கள் கூறியதுபோல் இந்த லெமன் கிராஸ் புல்களில் இருந்து மருத்துவ குணம் கொண்ட லெமன் ஆயில் தயாரிக்கப்படுகிறது. அந்த எண்ணெய் தயாரிக்கும் இடத்தையும் அங்கு பார்க்க முடிந்தது.
இந்த இடத்தில் இரண்டு View Point-கள் உள்ளன. முதலில் ஒரு மரத்தின் மேல் மரத்தால் கட்டப்பட்ட ஒரு சிறிய மேடை போன்ற இடம் உள்ளது.
அங்கு நின்றபடி சுற்றியுள்ள பசுமையான லெமன் கிராஸ் புல்களையும், தொலைவில் தெரியும் மறையூர் கிராமத்தின் அழகையும் ரசிக்கலாம்.
“லெமன் கிராஸ் என்று சொல்கிறார்கள், உண்மையில் புல்லில் எலுமிச்சை வாசனை இருக்கிறதா?” என்று தெரிந்து கொள்ள நான் ஒரு புல்லை பறித்து முகர்ந்து பார்த்தேன்.
அப்போ தான் புரிந்தது — அந்த மணம் உண்மையிலேயே எலுமிச்சை மணம் போலவே இருந்தது. அந்த வாசனை மிகவும் திகட்டாத சுவையாக இருந்தது.
அங்கிருந்து சிறிது தூரம் இறங்கி சுமார் 500 மீட்டர் ட்ரெக்கிங் சென்ற பிறகு இன்னொரு View Point உள்ளது.
அந்த இடத்தில் நின்று பார்த்தால் சுற்றிலும் பரந்து விரிந்த மலைகள், பசுமையான காடுகள், சிறிய கிராமங்கள் என கண்கொள்ளாக் காட்சிகள் தெரியும்.
இந்த அழகான காட்சிகள் காரணமாக இந்த இடத்தில் பல திரைப்படங்களின் காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளதாக அங்குள்ளவர்கள் கூறினர்.
தேன் பாறை (Honey Rock) 🐝
அடுத்ததாக ஜீப் எங்களை அழைத்துச் சென்ற இடம் தேன் பாறை.
அங்கு சென்றபோது முதலில் கண்ணில் பட்டது ஒரு பெரிய பாறை. அது மூன்று அடுக்குகளாக உயரமாக இருந்தது. அந்த பாறையின் மேற்பகுதிகளில் இயற்கையாகவே நிறைய தேன்கூடுகள் இருந்தன.
அந்த மூன்று அடுக்குகளிலும் சேர்த்து பார்த்தால் நூற்றுக்கணக்கான தேன்கூடுகள் இருந்ததை பார்க்க முடிந்தது. ஒரே இடத்தில் இவ்வளவு தேன்கூடுகளை நான் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை.
அதனால் தான் இந்த இடத்தை “தேன் பாறை” என்று அழைக்கிறார்கள் என்று நினைத்தேன்.
இந்த பாறையை ஜீப்பில் இருந்தபடியே பார்க்க முடியும். ஆனால் ஜீப் நிற்கும் இடத்திலிருந்து இரண்டு நிமிடம் நடந்தாலே அந்த பாறைக்கு இன்னும் அருகில் சென்று பார்க்கலாம்.
அருகில் சென்று பார்த்தபோது நூற்றுக்கணக்கான தேன்கூடுகள் அந்த பாறையில் தொங்கிக்கொண்டிருந்தது. அந்த காட்சி உண்மையிலேயே வியப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.
புரூட்ஸ் கார்டன் – காந்தளூரின் பழத்தோட்டம் 🍎🍓
தேன் பாறையை பார்த்து முடித்த பிறகு, அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் காந்தளூரின் அழகை மேலும் உயர்த்தும் “Fruits Garden”.
இந்த இடத்திற்குச் செல்லும் போது எனக்கு ஒரு விதமான உற்சாகம் இருந்தது. ஏனெனில் இங்கு தான் “குட்டி காஷ்மீர்” என்று அழைக்கப்படும் காந்தளூரின் ஆப்பிள் தோட்டங்கள் அமைந்துள்ளன.
ஆம், காந்தளூரை பொறுத்தவரையில் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்கள் அதிகமாக விளையும் இடமாக இது பிரபலமானது.
இந்த பழத்தோட்டத்தை சுற்றிப் பார்க்க நுழைவுக் கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. கட்டணம் செலுத்தி உள்ளே சென்றதும், சுற்றிலும் பரந்து விரிந்திருந்த பழ மரங்களையும் தோட்டங்களையும் பார்த்தவுடன் மனம் மகிழ்ச்சியடைந்தது.
இங்கு ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு மட்டும் அல்லாமல் பல்வேறு வகையான பழங்களும் விளைகின்றன.
அவற்றில் கருப்பு சப்போட்டா, ஸ்ட்ராபெர்ரி, பீச், பிளாக் பெர்ரி, ப்ளம்ஸ், நெல்லிக்காய் போன்ற பழங்கள் அதிகமாக காணப்படுகின்றன.
அதோடு மட்டுமல்லாமல், இங்கு பலவிதமான காய்கறிகளும் அதிகமாக பயிரிடப்படுகின்றன. குறிப்பாக காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு போன்றவை பரவலாக வளர்க்கப்படுவதை பார்க்க முடிந்தது. இதோடு பல வகையான மசாலா பயிர்களும் இங்கு பயிரிடப்படுகின்றன.
இந்த தோட்டத்தின் இன்னொரு சிறப்பு என்னவென்றால், காய்கறிகளும் பழங்களும் மட்டுமல்லாமல் பல நிறங்களில் பூக்கள் மலர்ந்து குலுங்கும் அழகையும் இங்கு காணலாம்.
ஒரே இடத்தில் இவ்வளவு வகையான பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்களை ஒன்றாகப் பார்ப்பது உண்மையிலேயே ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது. அந்த காட்சியை வார்த்தைகளால் முழுமையாக விவரிக்க முடியாது.
அங்கு வளர்ந்து கொண்டிருந்த பழங்களை நேரடியாக மரங்களிலும் செடிகளிலும் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது.
இந்த காந்தளூர் சுற்றுலாவை மேற்கொண்ட பிறகு, இன்னும் பல இயற்கை இடங்களை பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஒரு புதிய ஆர்வம் என்னுள் உருவானது.
உண்மையில் இந்த காந்தளூர் சுற்றுலா மனதில் இருந்த சலிப்பு மற்றும் வெறுப்பு அனைத்தையும் மறக்கச் செய்யும் அளவுக்கு அழகான அனுபவமாக இருந்தது.
வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்படிப்பட்ட இயற்கை சுற்றுலா இடங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அப்போது எனக்குள் உருவானது.
இந்த Fruits Garden-ல் நாங்கள் சில மணி நேரம் சுற்றிப் பார்த்தோம். மெதுவாக சூரியனும் மறைய தொடங்கியது. மாலை நேரத்தின் குளிர்ந்த காற்று அந்த இடத்தை இன்னும் அழகாக மாற்றியது.
அதன் பிறகு எங்களை அழைத்து வந்த ஜீப்பில் மீண்டும் ஏறி, நாங்கள் தங்கியிருந்த விடுதியை நோக்கி திரும்பினோம்.
மாலை நேர விளையாட்டுகளும் இரவு மகிழ்ச்சியும் 🎮🔥
காந்தளூரில் நான் தங்கியிருந்த அந்த விடுதியில் சுற்றுலாப்பயணிகளுக்காக பல்வேறு Indoor மற்றும் Outdoor விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நண்பர்களோடு, உறவினர்களோடு அல்லது குடும்பத்தினருடன் சேர்ந்து நமக்கு பிடித்த விளையாட்டுகளை விளையாடி நேரத்தை மகிழ்ச்சியாக கழிக்கலாம்.
சுற்றுலா செல்வது என்பது இடங்களை மட்டும் பார்ப்பதல்ல; இப்படி ஒன்றாக சேர்ந்து விளையாடி மகிழும் தருணங்களும் அந்த பயணத்தை இன்னும் இனிமையாக மாற்றிவிடுகின்றன.
மாலை நேரம் மெல்ல இரவாக மாறியதும் அந்த விடுதி முழுவதும் வண்ணமயமான விளக்குகளால் ஒளிர ஆரம்பித்தது. அந்த காட்சி உண்மையில் மிகவும் அழகாக இருந்தது.
காந்தளூரின் குளிர்ந்த இரவுகளை சமாளிக்க, அங்குள்ள விடுதிகளில் Camp Fire ஏற்பாடும் செய்து கொடுக்கப்படுகிறது. அந்த தீயின் அருகில் அமர்ந்து குளிர்ந்த காற்றை அனுபவிப்பது ஒரு தனித்துவமான உணர்வை தருகிறது.
அந்த தீயின் வெப்பம் உடலுக்குள் மெதுவாக பரவும்போது, குளிர்ந்த மலைக்காற்றும் அதனுடன் கலந்துகொண்டு மனதிற்கு ஒரு இனிமையான அமைதியை அளிக்கிறது.
அதோடு சுற்றுலாப்பயணிகள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க DJ இசையும் ஒலிக்கத் தொடங்கியது. இசை ஒலித்ததும் சிலர் மெதுவாக நடனமாட ஆரம்பித்தார்கள்.
பாடல்கள் ஒலிக்கும்போது அந்த சூழலே மாறிவிடுகிறது. அறியாமலேயே நாமும் அந்த இசைக்கு ஏற்ப நடனமாட ஆரம்பித்துவிடுகிறோம். நடனமாடுபவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மற்ற சுற்றுலாப்பயணிகள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
அந்த தருணத்தில் அங்கு இருந்த அனைவரும் ஒருவரை ஒருவர் அறியாதவர்களாக இருந்தாலும், ஒரு குடும்பம் போலவே மகிழ்ச்சியாக இருந்தோம்.
அந்த சூழலில் நம்முடைய எல்லா கவலைகளையும் மறந்து, மகிழ்ச்சியின் நடுவே இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.
உண்மையில் சுற்றுலா என்பது வெறும் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல், மனதில் இருக்கும் சலிப்பு, கவலை, அழுத்தம் ஆகியவற்றை மறக்கச் செய்யும் ஒரு அற்புதமான மருந்து போல செயல்படுகிறது.
இந்த அனுபவத்தை நான் நேரில் உணர்ந்ததால் தான், என் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.










