குறைந்த செலவில் கொடிவேரி அணை சுற்றுலா

கொடிவேரி அணை சுற்றுலா
கொடிவேரி அணை சுற்றுலா

“ஈரோடு அருகே குடும்பத்துடன் ஒரு நாள் அமைதியாக இயற்கையை ரசிக்க செல்லக்கூடிய இடம் எது?” என்று யாரிடமாவது கேட்டால், பலரும் முதலில் சொல்லும் பெயர் தான் Kodiveri Dam.

பவானி ஆற்றின் நீரை தடுத்து உருவாக்கப்பட்ட இந்த அழகிய அணை, இயற்கை அழகும், நீரின் சலசலப்பும், பழமையான வரலாறும் ஒன்றாக கலந்து இருக்கும் ஒரு சிறிய சொர்க்கம் போல தெரிகிறது.

நகரத்தின் இரைச்சலிலிருந்து சில மணி நேரம் விலகி மனதுக்கு அமைதி தேடும் பயணிகளுக்கு, கொடிவேரி அணை ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும்.

இன்று இந்த கட்டுரையில், கொடிவேரி அணைக்கு எப்படி செல்லலாம், அங்கே என்ன சிறப்புகள் இருக்கின்றன, ஏன் இந்த இடம் குடும்ப சுற்றுலாவிற்கு ஏற்றது என்பதை பார்க்கப் போகிறோம்.

மனஅழுத்தத்திற்கு மருந்தான சுற்றுலா

கணவன் மட்டும் வேலை செய்து குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்த காலம் மெல்ல மாறி, இன்று கணவன் மனைவி இருவரும் சேர்ந்து பணம் சம்பாதித்தால்தான் ஒரு சராசரியான வாழ்க்கையை கூட சமநிலையுடன் நடத்த முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது.

இந்த வேகமான வாழ்க்கை முறையில், குடும்பத்திற்காக செலவிடப்படும் நேரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது.

இன்றைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையில், மனிதத்தன்மையையும் மன அமைதியையும் மீண்டும் உணர வைக்கும் ஒரு சிறிய இடைவெளியாக சுற்றுலா மாறிவிட்டது. முன்பெல்லாம் கோடை விடுமுறை என்றால் உறவினர்கள் வீட்டிற்கு செல்வது வழக்கமாக இருந்தது.

ஆனால் இன்று அதே உறவினர்களையே அழைத்துக்கொண்டு ஒரு சிறிய சுற்றுலாவிற்கு செல்லும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

ஒரு சராசரியான வாழ்க்கை வாழும் குடும்பத்தின் சுற்றுலா திட்டம் பெரும்பாலும் மிகவும் எளிமையானதாக இருக்கும். குறைந்த செலவில் செல்லக்கூடிய இடம், ஒரு நாளில் முடிந்து விடும் பயணம், சில மணி நேர பேருந்து சவாரி, மனதை புத்துணர்ச்சி பெறச் செய்யும் ஒரு அருவிக் குளியல், அமைதியான தெய்வ தரிசனம், மதிய நேரத்தில் ஒரு சூடான உணவு, சிறிது நேர ஓய்வு, பின்னர் மீண்டும் வீடு திரும்புவது — இதுவே பலரின் சுற்றுலா கனவாக இருக்கிறது.

வசதிக்கேற்ற மகிழ்ச்சி

இப்படியும் ஒரு சுற்றுலா இருக்குமா என்ற கேள்வி சிலருக்கு தோன்றலாம். ஆனால் உண்மையில், சுற்றுலா என்பது செலவின் அளவில் அல்ல, மனம் பெறும் நிறைவின் அளவில் இருக்கிறது. அவரவர் வசதிக்கும் வாழ்க்கை முறைக்கும் ஏற்றபடி சுற்றுலா தலத்தை தேர்ந்தெடுக்க முடியும்.

இதற்கு பொருத்தமான ஒரு பழமொழி உள்ளது — “ஏழைக்கு ஏற்ற எள்ளு உருண்டை.”

அதன் பொருள், கடன் வாங்கி ஆடம்பரமாக வாழ்ந்து பின்னர் கஷ்டப்படுவதற்குப் பதிலாக, தன்னிடம் இருப்பதை வைத்து மகிழ்ச்சியை உருவாக்கிக் கொள்ள தெரிந்தவர்களே உண்மையில் வாழ்க்கையை ரசிப்பவர்கள் என்பதே.

ஒரே நாளில் குடும்பத்துடன் செல்லக்கூடிய சுற்றுலா

இன்றைக்கு நாம் பார்க்கவிருக்கும் சுற்றுலாத்தலம், குறைந்த செலவில் குடும்பத்துடன் ஒரே நாளில் சென்று வரக்கூடிய Kodiveri Dam கொடிவேரி அணை சுற்றுலாதலத்தை பற்றிதான்.

இயற்கை அழகும், அமைதியான நீர்ச் சூழலும் கொண்ட இந்த இடம், ஈரோடு மாவட்டத்தில் குடும்ப சுற்றுலாவிற்கு மிகவும் பொருத்தமான இடமாக பார்க்கப்படுகிறது.

நகர வாழ்க்கையின் சத்தத்திலிருந்து விலகி, ஒரு நாள் முழுவதும் மனநிறைவாக செலவிட விரும்புபவர்களுக்கு இந்த இடம் சிறந்த தேர்வாக இருக்கும்.

வழித்தடம் மற்றும் போக்குவரத்து

Erode ஈரோடு, Tiruppur திருப்பூர், Coimbatore கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து கொடிவேரி அணைக்கு பேருந்து வசதி உள்ளது. இந்த இடங்களில் இருந்து பேருந்து கட்டணம் பொதுவாக சுமார் 60 ரூபாய் வரை இருக்கும்.

Gobichettipalayam கோபிச்செட்டிபாளையம் அல்லது Sathyamangalam சத்தியமங்கலம் வரை முதலில் சென்றுவிட்டு, அங்கிருந்து சுமார் 12 கிலோமீட்டர் பயணம் செய்தால் Kodiveri Dam கொடிவேரி அணையை எளிதாக அடையலாம்.

பேருந்து, கார் அல்லது இருசக்கர வாகனம் மூலமாகவும் இந்த இடத்தை சுலபமாக சென்றடைய முடியும் என்பதால், குடும்பத்துடன் ஒரு நாள் சுற்றுலாவிற்கு இது மிகவும் வசதியான இடமாகும்.

நுழைவு கட்டணம் மற்றும் உள்ளே காணும் காட்சிகள்

Kodiveri Dam கொடிவேரி அணைக்குள் செல்ல நுழைவு கட்டணமாக ஒருவருக்கு ரூபாய் 5 வசூலிக்கப்படுகிறது.

அந்த கட்டணத்தை செலுத்தி உள்ளே நுழைந்தவுடன், சுற்றுலா பயணிகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் சிறிய கடைகள் வரிசையாக இருப்பதை பார்க்க முடியும்.

அந்த கடைகளில் குறிப்பாக மாங்காய், நாவல் பழம் போன்ற உள்ளூர் பழங்கள் அதிகமாக விற்கப்படுகின்றன.

அதோடு பல வகையாக வறுத்து வைத்த கருவாடுகளின் வாசனை காற்றில் கலந்தபடி வரும் போது, பார்த்தவுடன் நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும்.

குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாட சிறிய விளையாட்டு பொருட்களும் அங்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இன்னும் சிறிது தூரம் நடந்துச் சென்றால், அருவியில் குளித்து முடித்தவர்கள் அருகிலுள்ள கோவிலில் அமைதியாக வணங்கி கொண்டிருப்பதையும் பார்க்க முடியும்.

அதைத் தாண்டி சென்றபோது, குளித்து முடித்த சுற்றுலா பயணிகள் சூடாக சமைத்த மீன் வறுவல் மற்றும் மீன் குழம்புடன் உணவு சாப்பிடும் காட்சி நம்மையும் அங்கே அமர்ந்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கும்.

குடும்பத்துடன் பாதுகாப்பான குளியல் அனுபவம்

சுற்றுலா செல்லும் போது பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக குடும்பத்துடன் செல்லும் இடங்களில், தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் செல்லாமல் பாதுகாப்பான இடங்களில் மட்டுமே குளித்து அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும்.

Kodiveri Dam கொடிவேரி அணையில் வழிந்தோடும் நீரின் அழகை பார்த்தாலே நமக்குள் ஒரு இனம் புரியாத சந்தோசம் தோன்றிவிடும்.

குளிக்க வேண்டாம், பார்த்தால் போதும் என்று வருபவர்களையும் கூட அந்த அணையின் இயற்கை அழகு தண்ணீருக்குள் இறங்க தூண்டிவிடும்.

தண்ணீர் பாறைகளின் மீது மெதுவாக வழிந்தோடும் காட்சி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதமாக இருக்கும்.

குடும்பத்துடன் நின்று நீரில் கால்களை நனைக்கும் அந்த சிறிய தருணமே கூட மனதிற்கு பெரிய மகிழ்ச்சியை தரும்.

சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிக்க வேண்டும் என்பதற்காக பொதுப்பணித்துறை சார்பில் சில பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இதனால் பயணிகள் பயமின்றி, குடும்பத்துடன் அமைதியாக அந்த நீரின் குளிர்ச்சியையும் இயற்கையின் அழகையும் ரசிக்க முடிகிறது.

உடை மாற்றும் அறை மற்றும் குளியலறை வசதி

Kodiveri Dam கொடிவேரி அணையில் ஆனந்தமாக குளித்து முடித்த பிறகு, சுற்றுலா பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள உடை மாற்றும் அறைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். குடும்பத்துடன் வரும் பயணிகளுக்கு இது மிகவும் உதவிகரமான வசதியாக இருக்கும்.

அங்குள்ள குளியலறை மற்றும் உடை மாற்றும் அறைகள், குளித்துவிட்டு சிரமமில்லாமல் உடைகளை மாற்றிக்கொள்ள ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளதால், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் வரும் குடும்பங்களுக்கு கூடுதல் நிம்மதியை தருகிறது.

மீன் வறுவல் மற்றும் மீன்குழம்பு சாப்பாடு

அருவியில் குளித்து உடைகளை மாற்றிய பிறகு ஆற்றங்கரைக்கு வந்தால், பாலத்தின் கீழ்பகுதியில் பல சிறிய உணவுக் கடைகள் வரிசையாக இருப்பதை பார்க்கலாம்.

அங்கு மீன்குழம்பு சாப்பாடு கடைகள், சுடச்சுட மீன் வறுவல் கடைகள், மேலும் பல வகையான வறுத்த கருவாட்டு கடைகளும் காணப்படும்.

அந்த கடைகள் இருக்கும் இடத்திற்கே சென்றாலே காற்றில் கலக்கும் மீன் வறுவலின் மணம் நம்மை சாப்பிட வேண்டும் என்ற ஆசைக்கு இழுத்துச் செல்லும்.

நாம் விரும்பிய மீனை தேர்ந்தெடுத்தால், அங்கேயே புதிதாக சுடச்சுட வறுத்து கையில் கொடுத்து விடுவார்கள்.

அந்த சூடான மீன் வறுவலை ஆற்றங்கரையில் நின்றபடி சுவைக்கும் அனுபவம், கொடிவேரி சுற்றுலாவை இன்னும் நினைவில் நிற்கும் அனுபவமாக மாற்றிவிடும்.

பரிசல் பயணத்தின் இனிமை

கொடிவேரி அணைக்கு சென்ற பிறகு தவறாமல் அனுபவிக்க வேண்டிய ஒன்றாக பரிசல் பயணம் இருக்கும்.

அணையின் அமைதியான நீரில் மெதுவாக நகரும் அந்த பரிசலில் அமர்ந்து செல்லும் போது, கரையோரத்தில் பசுமையாக நின்ற மரங்களும், தண்ணீரின் மென்மையான ஓசையும் மனதிற்கு ஒரு தனி அமைதியை தரும். ஒரு மணி நேர பரிசல் சவாரிக்காக சுமார் ரூபாய் 50 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

குடும்பத்துடன் அமர்ந்து இயற்கையை ரசித்தபடி செல்லும் அந்த சில நிமிடங்கள், இந்த ஒரு நாள் சுற்றுலாவை இன்னும் நினைவாக மாற்றிவிடும்.

அருகிலுள்ள ஆன்மிக தலங்கள்

கொடிவேரி அணைக்கு அருகிலேயே பண்ணாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் உள்ளூர் மக்களிடம் மிகவும் பக்தியுடன் போற்றப்படும் தலமாக இருக்கிறது.

அதற்கு அடுத்ததாக பவானி கூடுதுறையில் காவேரி, பவானி மற்றும் அமுதா நதி சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் தரிசனம் செய்தால் மனநிறைவும், குடும்பத்திற்கு நல்லதொரு ஆசீர்வாதமும் கிடைக்கும் என பலர் நம்புகின்றனர்.

இயற்கை குளியலுடன் ஆன்மிக தரிசனமும் சேர்வதால் இந்த பயணம் இன்னும் நிறைவாக உணரப்படுகிறது.

குறைந்த செலவில் நிறைவான ஒரு நாள் சுற்றுலா

குறைந்த பேருந்து கட்டணம், ரூபாய் 5 நுழைவு சீட்டு, ரூபாய் 50 பரிசல் சவாரி, சுமார் ரூபாய் 100க்கு சுவையான மீன் சாப்பாடு என மிகவும் குறைந்த செலவில் இந்த சுற்றுலாவை அனுபவிக்க முடிகிறது.

அருவியில் பாதுகாப்பாக குளித்து, சுவையான உணவு சாப்பிட்டு, கோவிலில் தரிசனம் செய்து, குழந்தைகளுடன் சிறிது நேரம் பூங்காவில் கழித்து, ஒரே நாளில் மனநிறைவான அனுபவத்துடன் வீடு திரும்ப முடியும்.

குடும்பத்துடன் அமைதியாக ஒரு நாள் செலவிட விரும்புபவர்களுக்கு கொடிவேரி அணை ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top