ஏலகிரி மலை சுற்றுலா

ஏலகிரிமலைசுற்றுலா
ஏலகிரிமலைசுற்றுலா

சிறு வயதிலிருந்தே “சுற்றுலா” என்று கேட்டாலே மனதில் ஒரு புதுவிதமான சந்தோஷம் உருவாகும். பட்டாம்பூச்சி போல மனம் சிறகடித்து பறக்கத் தொடங்கும்.

புதிய இடங்களை பார்க்கும் ஆர்வமும், பயணத்தின் உற்சாகமும் எப்போதும் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் பரபரப்பான வாழ்க்கை சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.

வேலை, பொறுப்புகள், அவசரம் ஆகியவற்றின் நடுவில் மனதிற்கு ஓய்வும் புத்துணர்ச்சியும் தரக்கூடிய ஒன்றாக சுற்றுலா பயணங்கள் அமைந்துள்ளன.

சுற்றுலா என்றாலே சிலர் லட்சக்கணக்கில் செலவு செய்து தொலைதூர இடங்களுக்கு பயணம் செய்கிறார்கள். சிலர் பத்தாயிரம் அல்லது இருபதாயிரம் ரூபாய் செலவு செய்து குடும்பத்துடன் சுற்றுலா செல்கிறார்கள்.

அதே நேரத்தில், இன்னும் சிலர் தங்களிடம் இருக்கும் ஆயிரம் அல்லது ஐநூறு ரூபாயை வைத்துக்கொண்டு கூட குடும்பத்துடன் ஒரு நாள் சுற்றுலா சென்று மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் தங்களின் வசதிக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப ஒரு சுற்றுலா இடத்தைத் தேர்வு செய்து குடும்பத்துடன் அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்கள்.

அந்த வகையில் மிகக் குறைந்த செலவில் மனநிறைவும் புத்துணர்ச்சியும் அமைதியும் தரக்கூடிய அழகான மலைச்சுற்றுலா தளம் தான் Yelagiri.

வழித்தடம்

ஏலகிரி சுற்றுலா தலம் தற்போது புதிதாக பிரிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதிக்கு திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பெங்களூரு, வாணியம்பாடி, வேலூர், சென்னை போன்ற நகரங்களில் இருந்து வருபவர்கள் ரயில் மூலம் பயணம் செய்து ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கலாம். அங்கிருந்து பொன்னேரி வழியாக ஏலகிரிக்கு செல்ல வசதி உள்ளது.

பேருந்து மூலம் வருபவர்கள் ஜோலார்பேட்டை அருகிலுள்ள பொன்னேரி நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து ஏலகிரி மலைக்கு செல்லும் பேருந்துகளை பயன்படுத்தலாம்.

மேலும், சொந்த வாகனங்களில்—இருசக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம்—மூலமாகவும் ஏலகிரி மலைப்பகுதிக்கு எளிதாக பயணம் செய்ய முடியும்.

மலைப்பாதையில் செல்லும்போது பல கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டியிருக்கும். அந்த பாதையில் பயணம் செய்யும் போது சுற்றியுள்ள பசுமையான இயற்கை காட்சிகள் பயணத்தை இன்னும் இனிமையாக்கும்.

ஏலகிரி – சில முக்கிய தகவல்கள்

நான் சென்ற மலைச்சுற்றுலா இடங்களில் மிகவும் அமைதியான அனுபவத்தை கொடுத்த இடங்களில் ஒன்று Yelagiri. இந்த மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 1410 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

ஏலகிரி மலையை அடையும்போது முதலில் என்னை கவர்ந்தது அந்த 14 கொண்டை ஊசி வளைவுகள் தான்.

ஒவ்வொரு வளைவுக்கும் அழகான தமிழ்ப் பெயர்கள் வைக்கப்பட்டிருந்தது. அந்த பெயர்களில் Subramania Bharati, Thiruvalluvar, Ilango Adigal, Kambar, Kapilar, Avvaiyar போன்ற தமிழ்ப் புலவர்களின் பெயர்களும், பாரி, காரி, ஓரி, ஆய், அதியமான், நல்லி, பேகன் போன்ற கொடைவள்ளல்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தது.

ஒவ்வொரு வளைவிலும் நான் சிறிது நேரம் நின்று கீழே பார்த்தபோது, மலைகள், பசுமை, பள்ளத்தாக்கு—இவை அனைத்தும் சேர்ந்து மனதை பரவசப்படுத்தும் காட்சியை வழங்கின.

இந்த இடத்தின் மிகப் பெரிய சிறப்பு என்னவென்றால், இங்கு வரும் அனைவரும் ஒரே மாதிரியான மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்கிறார்கள்.

லட்சக்கணக்கில் செலவு செய்து வருபவர்களாக இருந்தாலும், குறைந்த செலவில் சுற்றுலா வருபவர்களாக இருந்தாலும், இந்த இடம் எல்லோருக்கும் ஒரே மாதிரியான மனநிறைவை தருகிறது.


ஏலகிரி மலைப்பாதையின் அனுபவம்

மலைப்பாதையில் மேலே மேலே ஏறிச் செல்லும்போது, குளிர்ந்த காற்று மெதுவாக முகத்தில் மோதுவது ஒரு இனிய அனுபவமாக இருந்தது.

சாலையின் இருபுறங்களிலும் இருந்த தைல மரங்கள் அந்த பாதைக்கு ஒரு தனி அழகை கொடுத்திருந்தது.

அந்த வழியாக செல்லும் போது அந்த மரங்களின் மணமும் குளிர்ந்த காற்றும் சேர்ந்து பயணத்தை மிகவும் இனிமையாக்கியது.

நகர வாழ்க்கையின் சத்தம் எல்லாம் மறைந்து, இயற்கையின் அமைதி மட்டும் நம்மை சுற்றி இருப்பதை நான் தெளிவாக உணர்ந்தேன்.


ஏலகிரி எவ்வளவு தொலைவில் உள்ளது?

என் பயணத்தின் போது தெரிந்த சில தொலைவுகள்:

  • Chennai – 219 கிலோமீட்டர்

  • Vaniyambadi – 39 கிலோமீட்டர்

  • Jolarpettai – 19 கிலோமீட்டர்

  • Bengaluru – 198 கிலோமீட்டர்

இதனால் பல நகரங்களில் இருந்து ஏலகிரியை எளிதாக அடைய முடிகிறது.


என் அனுபவத்தில் ஏலகிரி

நான் பார்த்தவரையில், Yelagiri என்பது மிகக் குறைந்த செலவில் கூட மனதிற்கு அமைதியும் புத்துணர்ச்சியும் தரக்கூடிய ஒரு சிறந்த மலைச்சுற்றுலா தளம்.

பெரிய திட்டங்கள் எதுவும் இல்லாமல் கூட, ஒரு நாள் நேரம் கிடைத்தால் குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு வந்து இயற்கையை ரசித்து திரும்பிச் செல்லக்கூடிய இடம் இது.

தொலைநோக்கி பார்வை மையம்

Yelagiri மலைக்கு ஏறிச் செல்லும் போது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்த இடங்களில் ஒன்று இந்த தொலைநோக்கி பார்வை மையம்.

மலைப்பாதையில் மேலே செல்லும்போது சுமார் 12-வது கொண்டை ஊசி வளைவை கடந்த சிறிது தூரத்தில் இந்த இடம் அமைந்துள்ளது.

அங்கு சென்றபோது சிறிது நேரம் நின்று சுற்றியுள்ள இயற்கைக் காட்சிகளை ரசிக்கத் தோன்றியது.

சில ஆண்டுகளாக இந்த மையம் சேதமடைந்த நிலையில் இருந்ததாகவும், சமீபத்தில் வனத்துறை அதை புதுப்பித்து சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறந்து வைத்துள்ளதாகவும் அங்கிருந்தவர்கள் கூறினார்கள்.

இந்த இடத்திற்குள் செல்ல சிறிய அளவில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உள்ளே அமைக்கப்பட்டுள்ள தொலைநோக்கி கருவியின் மூலம் கீழே பரந்து விரிந்த பகுதிகளை தெளிவாக பார்க்க முடிகிறது.

அந்த தொலைநோக்கி வழியாக பார்த்தபோது Tirupattur மற்றும் Vaniyambadi பகுதிகள் மிகவும் அழகாக காட்சியளித்தன.

மலையின் உயரத்தில் நின்று கீழே விரிந்த நகரங்களையும் பசுமையான நிலங்களையும் பார்க்கும் அந்த அனுபவம் உண்மையிலேயே மனதை கவர்ந்தது. சில நிமிடங்கள் அங்கு நின்று குளிர்ந்த காற்றை ரசித்தாலே பயணத்தின் சோர்வு எல்லாம் மறைந்து போகும் போல இருந்தது.

தங்கும் விடுதிகள்

Yelagiri இந்த மலைப்பகுதிக்கு “ஏழைகளின் ஊட்டி” என்ற செல்லப்பெயரும் உண்டு. குறைந்த செலவில் இயற்கையை ரசிக்க முடிவதால் பலரும் இந்த இடத்தை சுற்றுலாவுக்கு தேர்வு செய்கிறார்கள்.

சிலர் குடும்பத்துடன் ஒரு ஒருநாள் சுற்றுலாவாக வந்து முக்கியமான இடங்களை பார்த்துவிட்டு மாலைக்குள் திரும்பிச் செல்கிறார்கள்.

ஆனால் இன்னும் சிலர் இந்த மலைப்பகுதியின் அமைதியான சூழலையும் இயற்கை அழகையும் நிதானமாக அனுபவிக்க இரண்டு அல்லது மூன்று நாட்கள் தங்கி ரசித்துவிட்டு செல்கிறார்கள்.

இங்கு ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இரவு 9 மணிக்கு பிறகு மலையிலிருந்து கீழே எந்த வாகனங்களுக்கும் செல்ல அனுமதி கிடையாது. அதனால் இரவு தங்க திட்டமிடுபவர்கள் முன்கூட்டியே தங்கும் இடத்தை தேர்வு செய்து வைத்துக் கொள்வது நல்லது.

ஏலகிரியில் எல்லா வகையான பயணிகளுக்கும் ஏற்ப பல்வேறு தங்கும் விடுதிகள் உள்ளன. சாதாரண லாட்ஜ்களிலிருந்து ரிசார்ட்கள் வரை பல வசதிகள் கிடைக்கின்றன.

அதோடு இயற்கைக்கு அருகில் தங்கி அனுபவிக்க விரும்புபவர்களுக்கு Tent Stay வசதிகளும் பல இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நண்பர்களுடனோ அல்லது குடும்பத்தினருடனோ குறைந்த செலவில் அமைதியான சுற்றுலா அனுபவத்தை பெற ஏற்ற இடமாக Yelagiri இருக்கிறது.

இயற்கையின் அமைதியையும் குளிர்ந்த காற்றையும் அனுபவித்து சில நாட்கள் தங்கி வர விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

குடும்பத்துடன் ரசிக்க வேண்டிய முதல் சுற்றுலா இடம்

Yelagiri மலைப்பாதையில் இருக்கும் 14 கொண்டை ஊசி வளைவுகளையும் கடந்து மேலே வந்ததும், நான் முதலில் சென்ற இடம் Yelagiri Boat House தான்.

ஏலகிரி சுற்றுலாவுக்கு வரும் பலரும் முதலில் பார்க்கும் இடம் இதுதான்.

இந்த போட் ஹவுஸ் உள்ளே செல்ல சிறிய அளவு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு சுமார் 10 ரூபாயும், குழந்தைகளுக்கு 5 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

உள்ளே சென்றவுடன் அந்த இடத்தின் சூழல் மிகவும் சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் இருந்தது.

குறிப்பாக குழந்தைகளுக்காக பல பொழுதுபோக்கு விளையாட்டு வசதிகள் அமைக்கப்பட்டிருந்தது. ஊஞ்சல், சறுக்குமரம் போன்ற விளையாட்டுகளில் குழந்தைகள் ஆர்வமாக விளையாடிக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.

அதேபோல் கண் சுட்டிங், குட்டி கார் ரேஸ் போன்ற சிறிய விளையாட்டுகளும் அங்கு இருந்தது.

ஒரு பக்கத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் இருந்தால், இன்னொரு பக்கத்தில் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து விளையாடக்கூடிய வட்ட வடிவிலான விளையாட்டு அமைப்புகளும் இருந்தன.

குடும்பத்தோடு நேரத்தை மகிழ்ச்சியாக கழிக்க இது ஒரு நல்ல இடமாக எனக்கு தோன்றியது.

அங்கு கேன்டீன் வசதியும் இருந்தது. டீ, காபி, பால், ஐஸ்கிரீம், ஃப்ரைட் ரைஸ் போன்ற உணவுகள் கிடைக்கின்றன. சில கடைகளில் சுடச்சுட வறுத்த மீன் போன்ற உணவுகளும் கிடைத்தது.

ஏலகிரி போட் ஹவுஸ்

ஏலகிரி சுற்றுலாவுக்கு வரும் யாராக இருந்தாலும், குடும்பத்தோடு அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் நேரம் செலவிட வேண்டிய ஒரு இடமாக இந்த Yelagiri Boat House இருக்கிறது.

அங்கு சென்றபோது ஏரியின் அமைதியான சூழலும் சுற்றியுள்ள மரங்களும் அந்த இடத்திற்கு ஒரு தனி அழகை கொடுத்திருந்தது. அந்த ஏரியில் இரண்டு வகையான படகு சவாரி செய்யும் வசதி இருந்தது.

முதல் வகை துடுப்பு படகு சவாரி. இதில் துடுப்பை பயன்படுத்தி படகை இயக்க வேண்டும். இந்த படகில் செல்ல பெரியவர்களுக்கு சுமார் ₹50 மற்றும் குழந்தைகளுக்கு ₹25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இரண்டாவது வகை பெடல் படகு சவாரி. இதில் காலால் பெடல் அடித்து படகை இயக்க வேண்டும்.

குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு சேர்ந்து செல்ல இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இந்த படகிற்கு சுமார் ₹200 முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

படகு சவாரி பொதுவாக காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறுகிறது.

1️⃣ படகில் செல்லும் அனைவரும் கட்டாயமாக லைஃப் ஜாக்கெட் (Life Jacket) அணிய வேண்டும்.

2️⃣ ஒவ்வொரு படகிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

3️⃣ ஏரி ஆழமாக இருப்பதால் படகில் பயணம் செய்யும்போது எழுந்து நிற்பதும், இருக்கைகளை மாற்றிக் கொள்ளவும் அனுமதி இல்லை.

இந்த விதிமுறைகள் காரணமாக படகு சவாரி பாதுகாப்பாகவும் அதே நேரத்தில் மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாகவும் இருக்கும்.

படகு சவாரி செய்யாமல் இருந்தாலும், ஏரியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் சுமார் 30 நிமிடங்கள் அமைதியாக நடைபயணம் செய்யலாம்.

அந்த நடைபயணம் கூட மிகவும் இனிமையான அனுபவமாக இருக்கும்.

என் அனுபவத்தில், ஏலகிரிக்கு வருபவர்கள் கண்டிப்பாக ரசிக்க வேண்டிய ஒரு அனுபவம் இந்த Punganoor Lake படகு சவாரி தான்.

குளிர்ந்த காற்றும் அமைதியான ஏரியும் சேர்ந்து அந்த நேரத்தை மிகவும் நினைவில் நிற்கும் அனுபவமாக மாற்றிவிடும்.

ஏலகிரியில் வரவேற்கும் கடைகள் – உள்ளூர் சுவைகளை ரசிக்க ஒரு சிறந்த இடம்

Yelagiri மலைப்பகுதியில் உள்ள Yelagiri Boat House பார்த்து முடித்துவிட்டு வெளியே வந்ததும், அந்த வீதியின் இருபுறங்களிலும் வரிசையாக இருந்த கடைகள் நம்மை அன்பாக வரவேற்கும்.

அந்த கடைகளைப் பார்த்தவுடன் எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால், அங்கு கிடைக்கும் ஹோம்மேட் சாக்லேட் வகைகள். வீட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த சாக்லேட்டுகள் சுவையாகவும், மிகவும் குறைந்த விலையிலும் கிடைக்கின்றன.

அதோடு அங்குள்ள கடைகளில் புதியதாக கிடைக்கும் உள்ளூர் பழங்களும் அதிகமாக விற்கப்படுகின்றன.

குறிப்பாக ஏலகிரியில் மிகவும் அதிகமாக கிடைப்பது பலாப்பழம். இது அங்கே மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதை பார்க்க முடிந்தது.

அதேபோல் அங்கு ஸ்டார் ஃப்ரூட் (Star Fruit) என்ற ஒரு தனித்துவமான பழத்தையும் சாப்பிட வாய்ப்பு கிடைக்கும். சீசன் இல்லாத நேரத்திலும் கூட சில கடைகளில் மாங்காய் துண்டுகளாக வெட்டி விற்கும் காட்சி கூட பார்க்க முடிந்தது.

இதற்குப் பிறகும் அங்கு பல வகையான பழங்கள் கிடைக்கின்றன.

  • சீதாப்பழம்

  • ஆரஞ்சு

  • அத்திப்பழம்

  • காட்டுநெல்லிக்காய்

  • பிளம்ஸ்

  • கொய்யாப்பழம்

  • பேரிக்காய்

இப்படி பல வகையான பழங்களை அங்கு வாங்கி சாப்பிடலாம். இயற்கை சூழலில் அந்த பழங்களை சாப்பிடுவது ஒரு தனி அனுபவமாக இருந்தது.

பழங்களோடு மட்டுமல்லாமல், சில கடைகளில் பொம்மைகள், இயற்கை முறையில் தயாரிக்கப்படும் சோப்பு வகைகள்போன்ற பொருட்களையும் வாங்கிக்கொள்ளலாம்.

மேலும் அந்த சாலையின் இருபுறங்களிலும் தங்கும் விடுதிகள் அதிகமாக இருப்பதை கவனிக்க முடிந்தது.

ஏலகிரியில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் தங்கி அமைதியாக சுற்றி பார்க்க நினைப்பவர்களுக்கு இது மிகவும் வசதியாக இருக்கும்.

என் அனுபவத்தில், ஏலகிரி சுற்றுலாவில் இயற்கையை ரசிப்பதோடு சேர்த்து உள்ளூர் சுவைகளையும் அனுபவிக்க வேண்டிய இடம் இந்த கடைகள் நிறைந்த வீதி தான்.

மூலிகை தோட்டம் – இயற்கையின் மணம் நிறைந்த இடம்

Yelagiri மலைக்கு சென்றபோது, Yelagiri Boat House செல்லும் வழியிலேயே ஒரு சிறிய மூலிகை தோட்டம் மற்றும் அழகான கார்டன் இருப்பதை பார்க்க முடிந்தது.

அந்த தோட்டத்திற்குள் சென்றவுடன் பல வண்ணங்களில் பூத்திருந்த பூக்கள் மிகவும் அழகாக சிரித்தபடி நம்மை வரவேற்பது போல தோன்றியது.

சுற்றிலும் பல வகையான செடிகள் மற்றும் மூலிகைத் தாவரங்கள் இருந்ததால் அந்த இடம் மிகவும் பசுமையாகவும் அமைதியாகவும் இருந்தது.

அங்கிருந்த சில செடிகள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அந்த செடிகள் நமக்கு பிடித்திருந்தால், அங்கேயே வாங்கிக் கொண்டு செல்லும் வசதியும் உள்ளது.

இயற்கையை விரும்புபவர்களுக்கு இந்த இடம் ஒரு சிறிய மகிழ்ச்சியை தரும்.


நேச்சுரல் பார்க் – குடும்பத்துடன் நேரம் செலவிட சிறந்த இடம்

Yelagiri Nature Park என்பது Yelagiri Boat House க்கு எதிரில் அமைந்துள்ள ஒரு அழகான பூங்கா.

இந்த பார்க் உள்ளே செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு சுமார் ₹15 மற்றும் குழந்தைகளுக்கு ₹10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பார்வை நேரம் பொதுவாக காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை இருக்கும்.

இந்த நேச்சுரல் பார்க் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கக்கூடிய இடமாக இருக்கிறது. உள்ளே சென்றவுடன் பல விஷயங்களை பார்க்கவும் அனுபவிக்கவும் முடியும்.

அங்கு நான் பார்த்த முக்கியமான விஷயங்கள்:

  • திருவள்ளுவர் சிலை

  • அழகான ரோஸ் கார்டன்

  • செயற்கையாக உருவாக்கப்பட்ட சிறிய அருவி

  • குழந்தைகளுக்கான ஊஞ்சல் மற்றும் விளையாட்டு வசதிகள்

இந்த இடத்தில் சிறிது நேரம் அமர்ந்து இயற்கையை ரசித்தால் நேரம் எப்படி சென்றது என்று கூட தெரியாது. உண்மையில் எவ்வளவு நேரம் இருந்தாலும் போதாது என்று தோன்றும் அளவுக்கு அமைதியான சூழல் அங்கு இருந்தது.

ஏலகிரிக்கு குடும்பத்தோடு வருபவர்கள் கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டிய ஒரு இடமாக இந்த Yelagiri Nature Park இருக்கிறது.

 ஏலகிரியின் பல இடங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முயற்சி செய்யக்கூடிய பல அட்வென்சர் ஆக்டிவிட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த இடங்களில் நாம் விருப்பப்பட்டால் குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி ரோப் கிளைம்பிங், ஜிப் லைன், டிரெக்கிங், ராக் கிளைம்பிங் போன்ற பல சாகச விளையாட்டுகளில் கலந்து கொள்ளலாம்.

நண்பர்களோடு அல்லது குடும்பத்தோடு சேர்ந்து இவ்வாறான விளையாட்டுகளில் நேரத்தை செலவிடுவது ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.

இயற்கையின் நடுவில் சாகசமாக சில நேரம் கழித்தால் மனசுக்கும் உடலுக்கும் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். சாகசத்தை விரும்புபவர்களுக்கு ஏலகிரி ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.


ஏலகிரி முருகன் கோவில் – அமைதியை தரும் தெய்வ தரிசனம்

ஏலகிரியில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்று Yelagiri Murugan Temple.

இந்த கோவிலுக்கு செல்ல சிறிது படிக்கட்டுகளை ஏற வேண்டும். அந்த படிகளை மெதுவாக ஏறிக்கொண்டே செல்லும்போது சுற்றியுள்ள மலைகள் மற்றும் பசுமையான சூழல் மனதிற்கு மிகவும் இனிமையாக இருக்கும்.

மேலே சென்ற பிறகு முருகப்பெருமானை தரிசித்த அந்த நிமிடம் மிகவும் அமைதியான உணர்வை கொடுத்தது.

கோவிலின் அருகில் சில நேரம் அமைதியாக அமர்ந்திருந்தால் மனதில் இருந்த சோர்வு அனைத்தும் குறைந்து போவது போல உணர முடியும்.

ஏலகிரி சுற்றுலாவிற்கு வரும் போது இயற்கையையும் ரசித்து, ஆன்மீக அமைதியையும் பெற வேண்டுமென்றால் இந்த Yelagiri Murugan Temple கண்டிப்பாக செல்ல வேண்டிய ஒரு இடமாக இருக்கும். 🙏🌿

பண்டிரா பார்க் (Birds Park) – பறவைகளும் செல்லப் பிராணிகளும் நிறைந்த அனுபவம்

Yelagiri சுற்றுலாவில் நான் சென்ற மற்றொரு சுவாரஸ்யமான இடம் Fundera Park. இது பொதுவாக Birds Park என்று அழைக்கப்படுகிறது.

இந்த பார்க் உள்ளே செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு சுமார் ₹200 மற்றும் குழந்தைகளுக்கு ₹100 கட்டணம் செலுத்த வேண்டும்.

அந்த கட்டணத்தை செலுத்தி உள்ளே சென்றவுடன் ஒரு புதிய அனுபவம் காத்திருக்கிறது.

இந்த இடத்தின் முக்கிய சிறப்பு என்னவென்றால், இங்கு பல வகையான பறவைகளையும் செல்லப் பிராணிகளையும் நெருக்கமாக பார்க்க முடியும்.

அங்கு நான் பார்த்த சில விஷயங்கள்:

  • பல வகையான முயல்கள்

  • பல்வேறு கோழி இனங்கள்

  • ஆடுகள் மற்றும் மாடுகள்

  • பல வண்ணங்களில் இருக்கும் கிளிகள் மற்றும் பறவைகள்

பறவைகள் அனைத்தும் தனித்தனி கூண்டுகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அதில் சில பறவைகளுடன் நம்மால் கொஞ்சிக் விளையாடவும், உணவு கொடுக்கவும் முடியும்.

இந்த அனுபவம் குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் மகிழ்ச்சியானதாக இருக்கும்.

அவர்கள் பறவைகளை நெருக்கமாக பார்க்கும் போது முகத்தில் தெரியும் சந்தோஷம் அந்த இடத்தையே இன்னும் உயிர்ப்பாக மாற்றிவிடுகிறது.

என் அனுபவத்தில், குடும்பத்தோடு ஏலகிரி சுற்றுலாவுக்கு வந்தால் கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று இந்த Fundera Park தான்.

பறவைகளையும் செல்லப் பிராணிகளையும் நெருக்கமாக அனுபவிக்க இது ஒரு சிறந்த இடம்.

செல்ஃபி பண்டா & சாக்லேட் ஃபேக்டரி – குடும்பத்துடன் ரசிக்க வேண்டிய இடம்

Yelagiri சுற்றுலாவில் நான் சென்ற சுவாரஸ்யமான இடங்களில் ஒன்று Selfie Panda Yelagiri.

இங்கு செல்ல சுமார் ₹200 நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உள்ளே சென்றவுடன் பல வகையான Selfie Pointsஅமைக்கப்பட்டிருக்கும்.

வண்ணமயமான பின்னணிகள், அழகான அமைப்புகள் ஆகியவற்றின் முன் நின்று விதவிதமான புகைப்படங்கள் எடுக்கலாம். புகைப்படம் எடுக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.

இந்த இடத்தின் மற்றொரு சிறப்பு சாக்லேட் ஃபேக்டரி அனுபவம். இங்கு குழந்தைகள் மிகவும் ஆர்வமாக பார்க்கும் விஷயம் என்னவென்றால், சாக்லேட் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை நேரில் பார்க்க முடிவது.

சில நேரங்களில் குழந்தைகள் தங்களே சாக்லேட் தயாரிப்பதில் கலந்து கொள்வதையும் பார்க்க முடியும். அதை பார்க்கும் போது அவர்கள் முகத்தில் தெரியும் சந்தோஷம் மிகவும் அழகாக இருக்கும்.

மேலும் இங்கு ATV Ride போன்ற சாகச அனுபவங்களும் இருக்கின்றன. குழந்தைகளுடன் சேர்ந்து அந்த ரைடில் செல்லுவது மிகவும் மகிழ்ச்சியானதாகவும் மறக்க முடியாத அனுபவமாகவும் இருக்கும்.


ஏலகிரி சுற்றுலா – ஒரு நாள் மகிழ்ச்சியான பயணம்

ஏலகிரியில் இதற்கு மேலாகவும் பல ஆன்மீக மற்றும் சுற்றுலா இடங்கள் உள்ளன. குறிப்பாக

  • Perumal Temple Yelagiri

  • Sivan Temple Yelagiri

போன்ற கோவில்களையும் தரிசிக்கலாம். மேலும் சிறிய சிறிய சுற்றுலா இடங்களும் அங்கங்கே இருக்கின்றன.

இந்த முழு பயணத்தைப் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், குடும்பத்தோடும் நண்பர்களோடும் ஒரு நாள் மகிழ்ச்சியாகவும் குதூகலத்தோடும் கழிக்க ஏற்ற சிறந்த சுற்றுலா இடம் ஏலகிரி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இயற்கை அழகு, சாகச அனுபவங்கள், அமைதி, குடும்ப மகிழ்ச்சி — இந்த எல்லாவற்றையும் ஒரே இடத்தில் அனுபவிக்க முடியும் என்பதால், குறைந்த செலவில் மனநிறைவு தரும் ஒரு நல்ல சுற்றுலா தளமாக Yelagiriஇருக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top