இலங்கையில் உள்ள சுற்றுலாத்தலங்கள்

எதிர்கால கனவுகளை எண்ணி எண்ணி அதை நிறைவேற்ற கடல்கடந்து, வெற்றி எனும் விண்ணுலகத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் காலம் இது .
வெறித்தனமான இச்சூழலில் மனிதனின் மனதை ஒருநிலைப் படுத்தி அமைதியான சூழ்நிலையில் வாழ்வது என்பது மிகவும் கடினம். மனிதனின் ஆழ்நிலை மனதை ஒரு நிலைப்படுத்த ஒரே வழி.
நமக்கு எதை செய்தால் நம் மனம் மகிழ்ச்சி என்னும் கடலில் நீந்துமோ அவற்றை கடைபிடிப்போம். அதற்காக அளவில்லா ஆசைகளை எண்ணி அலைய வேண்டாம்.
ஏழை எளிய மக்கள் முதல் வசதிபடைத்தவர்கள் வரை அனைவரையும் வெகுவாக கவரும் சில யுக்திகளை கையாள்வோம். அவற்றுள் சில உரையாடல்கள் கேட்பது,
புத்தகங்களை வாசிப்பது,பாடல்கள் கேட்பது,கோவிலுக்கு செல்வது, பயணங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம்.
இவற்றில் வெகுவாக மக்களை ஈர்க்கும் ஒன்று பயணங்கள். சாதாரணமாக பயணங்கள் என்றாலே நமக்கு அலாதி இன்பம். அதிலும் நெடுதூரம் பயணத்தை பற்றி சொல்லவே வேண்டாம்.
இங்கே பயணங்களில் அதிக வரவேற்பை பெற்றது மலைகள் சார்ந்து ,கடல்கள் சார்ந்து,கலாச்சாரம் சார்ந்து,பொழுதுபோக்கு சார்ந்து என பல உண்டு.
அவற்றில் ஒன்று இயற்கை எழில் கொஞ்சும் அழகை ரசித்தவாறு நீண்ட தூர பயணங்கள் சென்று அங்குள்ள அழியாத வரலாற்று சுவடுகளை காண்பது.
நானும் நீண்ட தூர சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு அங்குள்ள இயற்கை அன்னையின் படைப்புகளையும்,அங்குள்ள சிறப்பு வாய்ந்த இடங்களையும் சுற்றிப்பார்க்க விரும்பினேன்.
அதற்காக தேர்ந்தெடுத்த சுற்றுலா இடம் தான் இலங்கை.அதிக தமிழ் உறவுகளை கொண்ட இலங்கையை சுற்றிப்பார்க்க முனைத்தேன்.
இலங்கை:
அழகிய நீர்விழ்ச்சிகள்,உயரமான மலைகள்,ஆபத்தான பள்ளத்தாக்குகள்,உயரமான மலையிலிருந்து ஆர்பரித்துக் கொட்டும் நீரின் அழகு,இலங்கை முழுக்கு தன் வசப்படுத்தியுள்ள பசுமையான தேயிலை தோட்டங்கள் என இலங்கையின் அழகை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.
தமிழர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் இனம் புரியாத பிணைப்பு உண்டு.பழங்கால கலாச்சாரம் இன்றளவிலும் இங்குள்ள மக்களால் பின்பற்றப்படுகிறது.இலங்கைக்கு பலபெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது.
அவை சிலோன் , ஸ்ரீலங்கா, இலங்கை,ஈழம் என பல பெயர்கள் உண்டு.பல சுற்றுலா தலங்களையும்,புராணக்கதைகளில் பேசப்படும் பல வரலாற்று சுவடுகளும் கொண்ட அழகிய தீவு ,நான்கு பக்கமும் கடல் அன்னையால் சுழல்பட்ட ஒரு அழகிய தீவு என பல பெருமைகளுக்கு பெயர்போனது.
இங்குள்ள தமிழ் மக்களை இந்திய தமிழர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் என வேறுபடுத்தப்பட்டுள்ளனர்.ஆனால் இங்குள்ள தமிழ் நெஞ்சங்கள் பேசும் தமிழ்மொழி கேட்பதற்கு அவ்வளவு இனிமையானதாக இருக்கும்.
அதேபோல இலங்கை மக்கள் இங்கு வரும் சுற்றுலா செல்பவர்களிடமும் சரி உள்ளூர் மக்களிடமும் சரி அன்பாகவும் கனிவாகவும் பேசும் விதம் மறுபடியும் மறுபடியும் இங்கு வர தூண்டும் என்று சொல்லலாம்.
தேயிலை தோட்டங்கள் அதிகம் காணப்படும் இடம் மற்றும் உலகில் உள்ள மிகப்பெரிய தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இலங்கையும் ஒன்று.
இலங்கையில் உள்ள சுற்றுலாத்தலங்கள் :
இலங்கையில் சுற்றிப்பார்க்க ஏராளமான சுற்றுலாத்தலங்கள் உள்ளன. அவற்றில் நான் சென்று ரசித்த இடங்கள் சில யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, தம்புளை, திருக்கோணமலை, கொழும்பு, அப்புத்தளை, நுவரெலியா, எல்ல ஒன்பது வளைவு பாலம் என பல இடங்களை சுற்றி பார்த்தேன்.
இதில் ஒன்றான இலங்கையின் ஊட்டி என்றழைக்கப்படும் நுவரெலியாவை தான் இன்று கட்டுரை வழியாக சுற்றிக்காட்ட போகிறேன்.வாங்க கட்டுரைக்குள்ள போகலாம்.
இலங்கையில் உள்ள சில சுற்றுலா இடங்களுக்கு சென்று அங்குள்ள அற்புதங்களை கண்டேன்.அதன் பிறகு இலங்கையில் உள்ள ஒவ்வொரு சுற்றுலா தலங்களையும் குறைந்தபட்சமாக இரண்டு நாட்கள் சுற்றிப்பார்த்தேன்.
அப்படியே ஒவ்வொரு பகுதிகளையும் ரசித்தபடி என்னுடைய பயணத்தை தொடர்ந்தேன்.இப்பொழுது நாங்கள் இலங்கையில் உள்ள அப்புத்தளை டூ நுவரெலியா மலைவாழ் ஸ்தலம் செல்ல போகிறோம்.
அப்படியே செல்லும்பொழுது வழியெங்கிலும் உள்ள சுற்றுலா இடங்களை ரசிக்கப்போகிறோம்.எங்களுடைய இந்த பயணம் காரில் சென்று ரசிக்க போகிறோம்.
அப்புத்தளையில் ஒரு நாள் தங்கி,கொழும்பு டூ அப்புத்தளைக்கு ரத்தினபுரி வழியாக பயணிக்க முடிவெடுத்தேன். இங்கிருந்து 98 கிலோமீட்டர் காரில் பயணம் மேற்கொள்ளப்போகிறோம்.
நாங்கள் செல்லும் வழியில் இரண்டு சிறு பாலம் ஒன்றை கடந்தோம். இந்த இரட்டை பாலத்திற்க்கு கலுபஹானா இரட்டை மேம்பாலம் என்று பெயர்.
இந்த பாலம் பதுளை மாவட்டத்தில் எல்லவில் சுற்றுலா மேற்கொள்பவர்களுக்கு மிகவும் பிரபலமான இடம். இந்த பாலத்தின் அருகில் பல வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது.
அதேபோல அங்கு ஒரு சிறு தேனீர் கடை உள்ளது.அந்த கடையின் பக்கத்தில் உள்ள சிறு பாதையில் பயணிகள் ஆர்வமாக சென்றனர்.நாங்களும் அவர்களின் வழியே சென்றால் தான் புரிகின்றது, நம்மை அங்குள்ள அழகு மெய்சிலிர்க்க வைத்தது எப்படி என்று .
அழகு மெய்சிலிர்க்க
இந்த பாலம் சுற்றிலும் இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதி, மூச்சடைக்கக்கூடிய பசுமை நிறைந்த நிலப்பரப்புகள் மற்றும் ஆறு என இங்குள்ள காட்சிகள் கண்களுக்கு விருந்தளிக்கும்.
ஒரு மலையின் அடியில் ஒரு அழகான ஆறு பாய்ந்தோடுகின்றது.அதோடு அழகான சின்ன சின்ன நீர்விழ்ச்சிகளில் இருந்து தண்ணீர் கொட்டும் அழகை சொல்ல வார்த்தைகளே இல்லை.
இந்த ஆற்றில் இறங்கி இயற்கை அழகை முழுமையாக அனுபவித்து குளிக்காத சுற்றுலாப்பயணிகளே யாரும் இல்லை.இந்த பாலத்தை கடக்கும் அனைத்து சுற்றுலா பயணிகளும் இங்குள்ள நீரில் குழந்தைகளை போல துள்ளி விளையாடும் அழகை நம்மால் உணரமுடியும்.
என்ன ஒன்று இங்கு நான் தான் துரதிஷ்டசாலி எங்களுக்கு குளிக்க நேரம் கிடைக்கவில்லை. இந்த நீரில் கால்நனைத்தபடி சிறிதுநேரம் விளையாடிவிட்டு,மற்ற சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து ரசித்த பிறகே அங்கிருந்து கிளம்பினோம்.
இங்கிருந்து அப்புத்தளைக்கு 17 கிலோமீட்டர் தூரம் இருக்கும்.கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் பயணத்திற்கு பிறகு நமது வாகனம் ஒரு மலையின் மீது ஏற தொடங்கியது.
வாகனம் மெல்ல மெல்ல மலைப்பகுதியை நோக்கி செல்ல ஆரம்பித்தது,இங்குள்ள அழகும் சரி,குளிர்ந்த காலநிலையும் சரி நம்மை இலங்கையில் இப்படி ஒரு இடமா என வியக்க வைத்தது.
அவ்வளவு குளிர்ந்து காணப்பட்டது இந்த இடம்.தமிழ்நாட்டில் உள்ள ஊட்டி,கொடைக்கானல் போல இந்த இடம் குளிர்ந்த காலநிலையை நிலவியது.
நாங்கள் சென்றது மே மாதம் என்றாலும் மாலைநேரத்தில் சுற்றிலும் பனிமூட்டங்கள் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் இருப்பது போல நம்மை உணரவைத்தது.
ஒரு வழியாக அப்புத்தளையில் உள்ள தங்கும் விடுதியை அடைந்தோம்.அப்பொழுது நேரம் மாலை 6.30 மணி.இரவு உணவை அருந்திய பிறகு உறங்க சென்றுவிட்டோம்.
இந்த விடுதி மலையின் சரிவில் கட்டப்பட்டுள்ளதால் அடுத்தநாள் காலையில் அறையின் வெளிப்புறம் வந்து பார்த்தால் சுற்றியுள்ள தேயிலை தோட்டங்களின் அழகும் ,பனிமூட்டங்களும் வருடுவதை சொல்ல வார்த்தைகளே இல்லை.காலை உணவை முடித்தபிறகு அடுத்த சுற்றுலா இடத்தை காண புறப்பட்டு விட்டோம்.
அதிஷாம் பங்களா(St Benedict’s Monastery – Adisham Bungalow):
அப்புத்தளையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள பழங்கால பங்களாவிற்கு தான் வந்துள்ளோம்.இந்த பங்களா சரி இங்குள்ள தோட்டங்களும் சரி சுற்றுலாப்பயணிகளின் மனதை கொள்ளைகொள்ளும் அளவிற்க்கு இருந்தது.
பார்ப்பதற்கு பிரிட்டிஷ்காரர்களின் பங்களாவை போல காட்சியளித்தாலும்,ஆங்கிலேயர்களின் கற்பனை திறன்களை கொட்டி வடிவைமைக்கப்பட்டுள்ளது.
பார்ப்பதற்க்கு பழங்கால வீடு என்று யாராலும் சொல்லமுடியாத அளவிற்க்கு கட்டப்பட்டுள்ளது.ஒரு காலத்தில் வீடாக இருந்தாலும் தற்பொழுது செயின்ட் பெனடிக்ட்டின் அதிஷாம் மடாலயமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த பங்களாவை பொறுத்தவரையில் நூலகம்,அவர்கள் வாழ்ந்த அறைகள்,விருந்தினர் மாளிகைகள் மட்டுமே தற்பொழுது பார்வைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
அதோடு அவர்கள் பயன்படுத்திய சில பொருட்களை நினைவு சின்னமாக பத்திரப்படுத்தி வருகின்றனர்.இங்குள்ள விருந்தினர் மாளிகையில் மட்டும் சுற்றுலாப்பயணிகள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
சர் தாமஸ் வில்லியர்ஸும் அவரது கனவு இல்லமும் :-
1931 ஆம் ஆண்டு சர் தாமஸ் வில்லியர்ஸ் என்பரால் கட்டப்பட்டது தான் இந்த அதிசம் பங்களா(Adisham Bungalow).இது இவருடைய கனவு இல்லம் என்றும் சொல்லலாம்.
அந்த அளவிற்க்கு இந்த வீட்டையும் சரி சுற்றியுள்ள பூங்காக்களையும் சரி ஒவ்வொன்றையும் பார்த்து ரசித்தி வடிவமைத்துள்ளார்.ஒரு காலத்தில் கனவு இல்லமாக பார்க்கப்பட்ட இந்த வீடு இன்றளவிலும் பலரது நினைவாக மனதில் நிலைத்து நிற்கிறது.
விட்டிற்கு பயன்படுத்தப்பட்டுள்ள அழகிய ஜன்னல்கள்,கதவு,படிக்கட்டுகள் என சிலபொருட்கள் நேர்த்தியான மரத்தால் செய்யப்பட்டுள்ளது.இந்த பழங்கால பங்களாவில் தட்டச்சு மிஷின்,கையில் வரையப்பட்ட தனது உறவினர்களின் சிறு சிறு உருவப்படங்கள்,மெத்தைகள்,நாற்காலி,மேசைகள் என பல பொருட்கள் சுற்றுலா பயணிகளின் கட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த அதிஷம் பங்களா அமைதி ,தனிமை மற்றும் அழகு என கற்பனையை மிஞ்சும் அளவிற்கு உயரமான பைன் மரங்களுக்கு நடுவில் அமைந்துள்ள அழகான வீடு.
ஆடிசம் பங்களா விடுமுறைக்கு வருபவர்கள் மற்றும் தற்செயலாக வருபவர்கள் அனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய ஒரு அமைதியான ரிசார்ட். இந்த வீடு ஒரு குன்றின் ஓரத்தில் அமைந்துள்ளது.
இந்த வீடு முழுக்க முழுக்கு கருங்கற்களை கொண்டு அழகாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.வீட்டை சுற்றிலும் பல தோட்டங்களை கொண்டு அழகாக பராமரிக்கப்படுகிறது.
பல வண்ணங்களில் பூக்கள் பூத்து குலுங்கும் மலர்த்தோட்டங்கள் ,கம்பிரமான மரங்கள் , பல வகையான பழத்தோட்டங்கள்,புல்வெளிகள் மற்றும் அழகிய தோட்டங்கள் என மேலும் இவ்வீட்டை அழகுபடுத்துகிறது.
அதேபோல பங்களாவிற்கு அருகில் ஒரு இந்துக்கோவிலும்,அதன் மேற்புறம் யூகலிப்டஸ் காடுகளும்,தேயிலை தோட்டங்களும் உள்ளன.பங்களாவை விட இங்குள்ள தோட்டங்களை பராமரிப்பது சவாலான ஒன்று.
அதிஷம் பங்களாவை பொறுத்தவரையில் இங்கு நிலவும் குளிர்ச்சியான காலநிலை,அமைதியான சூழல்,கண்களுக்கு விருந்தளிக்கும் பூங்காக்கள்,அருமையான உணவு,மரங்கள் என ஒரு மனிதன் தன்னுடைய மனக்கவலை,குழப்பங்கள்,
என அனைத்தையும் மறந்து தனக்கு தேவையான சந்தோஷத்தை அடைய வழிவகுக்கும்.
அதிசம் இயற்கை பொருட்கள் :-
அதிசம் பங்களாவை பொறுத்தவரையில் ஒரு சொர்க்கமாக பார்க்கப்படுகிறது.இந்த பங்களாவை சுற்றிலும் பல அதிசயங்கள் கொட்டிக்கிடக்கிறது. இங்கு இயற்கையான முறையில் உற்பத்திசெய்த பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை கூடம் ஒன்று உள்ளது .
இந்த பங்களாவின் ஒரு அறையில் பைன் ஆப்பிள் ஜாம்,ஸ்ட்ராபெர்ரி ஜாம்,மிக்சிங் புரூட்ஸ் ஜாம்,ஆப்பிள் ஜாம் ,மாங்காய் ஜாம் ,விளாம்பழம் ஜாம் ,தக்காளி ஜாம்என பல வகையான ஜாம்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது .
அதே போல மாங்காய் ஊறுகாய் ,எலுமிச்சை ஊறுகாய் ,அம்பிரலங்காய் ஊறுகாய்கள்,பேரீச்சை ஊறுகாய் என பல வகை ஊறுகாய்களும் விற்பனை செய்யப்படுகிறது.
முள் சீத்தாப்பழம் கார்டியல்,மிக்சிங் கார்டியல் ,மாங்காய் கார்டியல் ,இஞ்சி கார்டியல் ,அன்னாசி பழம் கார்டியல் ,பேஷன் பிரூட்ஸ் கார்டியல் என ஒருவகையான இனிப்பும் புளிப்பும் கலந்த ஜூஸ் வகைகள் , காபி என அனைத்தும் கிடைக்கும் .
அதே போல அதிசம் பங்களாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அனைத்து பொருள்களும் இங்கு பயிரிடப்பட்ட உணவு பொருட்கள் கொண்டு வீட்டில் தயாரிக்கப்பட்ட சொந்த தயாரிப்பு மற்றும் தரமான பொருட்கள் .
குறிப்பாக ஸ்ட்ராபெரி ஜாம்,காட்டு கொய்யாவில் தயாரிக்கப்படும் ஜெல்லி,ஆரஞ்சி மார்மலேட் மற்றும் ப்ரஷ் புரூட்ஸ் கார்டியல்ஸ் போன்ற சொந்த தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு.
பயணிகள் தங்களுக்கு தேவையான தின்பண்டங்கள் உண்டு மகிழலாம். அதோடு தேவையெனில் வீட்டிற்க்கு வாங்கிக்கொண்டு செல்லலாம்.வார இறுதி நாட்களான சனி,ஞாயிறு கிழமைகளில் கூட்டம் அலைமோதும்.
அதற்கு தகுந்தபடி பயணத்தை திட்டமிடுங்கள்.அதேபோல பொதுவிடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் என கூட்ட நெரிச்சல் அதிகம் ஏற்படும்.அதற்கு தகுந்தாற்போல நம்முடைய பயணத்தை திட்டமிடவேண்டும்.
தங்கும் விடுதி:-
இந்த பங்களாவை பொறுத்தவரையில் தற்பொழுது மடமாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் அதிஷம் பங்களாவில் உள்ள மொத்த அறைகளில்,ஒரு சில அறைகள் மட்டுமே தற்பொழுது தங்கும் விடுதியாக பயன்படுத்தப்படுகிறது.
குறைந்தது 12 பேர் தங்கும் அளவிற்க்கு தங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது . அதிஷம் பங்களாவில் உள்ள தங்கும் விடுதியில் ஒரு நாள் தங்க இலங்கை பணத்தில் ரூ.5000 ரூபாய் ஒருவருக்கு வசூலிக்கப்படுகிறது.
அதோடு மூன்றுவேளை உணவும் வழங்கப்படும்.உணவிற்கு பயன்படுத்தப்படும் சில காய்கறிகள் அதிஷம் பங்களாவில் விளைவிக்கப்பட்டது.அதிஷம் பங்களாவில் பல ஓவியங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் கைகளை கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள்.இந்த ஓவியத்திற்கு பயன்படுத்தப்பட்ட வர்ணங்கள் அனைத்தும் இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டு வண்ணம் பூசப்பட்டுள்ளது.
நுழைவு கட்டணம் :
இங்கு நுழைவுக்கட்டணமாக உள்ளூர் மக்களுக்கு பெரியவர்களுக்கு 100 ரூபாயும்,சிறியவர்களுக்கு 50 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.வெளிநாட்டவர்களுக்கு பெரியவர்களுக்கு 300 ரூபாயும்,குழந்தைகளுக்கு 200 ரூபாயும் இலங்கை பணமதிப்பில் வசூலிக்கப்படுகிறது.





