ஆடம்பர துபாய் சுற்றுலா
துபாய் என்றாலே பெரும்பாலும் நமக்கு முதலில் நினைவில் வருவது பாலைவனம் தான். ஆனால் அந்த பாலைவனத்திலேயே பல வண்ணங்களில் பூத்து குலுங்கும் மலர்கள், வானத்தைத் தொட்டுப் பேசும் உயரமான நவீன கட்டிடங்கள், உலகத் தரமான உணவகங்கள், ஆடம்பரமான ஹோட்டல்கள் மற்றும் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால்கள் என பல அம்சங்களால் துபாய் இன்று உலகம் முழுவதும் கவனம் ஈர்த்த ஒரு நகரமாக மாறியுள்ளது.
இதனால் தான் உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகளின் மனதை கவர்ந்த நகரமாக துபாய் திகழ்கிறது. உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் துபாய் அறியப்படுகிறது.
Dubai என்பது United Arab Emirates நாட்டில் அமைந்துள்ள ஒரு துடிப்பான மற்றும் நவீன நகரமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முக்கியமான சுற்றுலா தலமாக துபாய் பெருமை பெற்றுள்ளது.
துபாய் சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு இந்த கட்டுரை ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும்.
நானும் என்னுடைய நண்பர்களும் சேர்ந்து துபாய் சென்று அங்குள்ள முக்கியமான சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்க்க முடிவு செய்தோம்.
அதற்காக குறைந்தது நான்கு முதல் ஐந்து நாட்கள் துபாயில் தங்கி அங்குள்ள அழகான இடங்களை பார்க்க திட்டமிட்டோம்.
பயணம் எளிதாகவும் சீராகவும் அமைய ஒரு தனியார் சுற்றுலா நிறுவனத்தை தேர்ந்தெடுத்து, அவர்களின் வழிகாட்டுதலின் படி துபாய் செல்ல தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தோம்.
துபாய் செல்ல நாம் செய்ய வேண்டியது
துபாய் சுற்றுலா செல்ல பெரிதாக பயப்பட வேண்டிய அவசியமில்லை. இப்போது பல தனியார் சுற்றுலா நிறுவனங்கள் நமக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்து கொடுக்கின்றன. அதனால் பயணம் மிகவும் எளிதாகவும் சிரமமின்றியும் அமையும்.
நாம் செய்ய வேண்டியது, இங்கிருந்து துபாய் சென்று அங்குள்ள அழகிய சுற்றுலா இடங்களை எந்த பதட்டமும் இல்லாமல் மகிழ்ச்சியாக சுற்றிப்பார்ப்பது மட்டுமே.
இந்த பயணத்திற்காக நான் நான்கு இரவு மற்றும் ஐந்து நாள் கொண்ட சுற்றுலா பேக்கஜை தேர்வு செய்தேன். இந்த துபாய் சுற்றுலா பேக்கஜில் பொதுவாக வழங்கப்படும் வசதிகள் பல உள்ளன.
அதில் பிளைட் டிக்கெட் (Up & Down), விசா, டிராவல் இன்சூரன்ஸ், மேலும் Dubai International Airport விமான நிலையத்திலிருந்து Pick-up & Drop வசதி ஆகியவை அடங்கும்.
அதற்கு கூடுதலாக, துபாயில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்க்க கார் வசதி, 4-Star ஹோட்டல் தங்கும் வசதி, முக்கிய சுற்றுலா இடங்களுக்கு தேவையான Entry Ticket, மேலும் மூன்று வேளை உணவு போன்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் சுற்றுலா நிறுவனங்களே ஏற்பாடு செய்து தருவார்கள்.
தமிழ்நாட்டிலிருந்து துபாய் செல்லும் விமான நிலையங்கள்
இப்போது தமிழ்நாட்டிலிருந்து துபாய் செல்ல பல சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை:
-
Chennai International Airport (MAA) – நேரடி விமானங்கள் அதிகம் உள்ள சிறந்த தேர்வு
-
Coimbatore International Airport (CJB)
-
Tiruchirappalli International Airport (TRZ)
-
Madurai Airport (IXM)
தமிழ்நாட்டில் உள்ள இந்த விமான நிலையங்களில் இருந்து பல விமானங்கள் துபாய்க்கு இயக்கப்படுகின்றன. நம் வசதிக்கேற்ப அருகில் உள்ள விமான நிலையத்தை தேர்வு செய்து பயணிக்கலாம்.
துபாய்க்கு செல்லும் முக்கிய விமான நிறுவனங்கள்
தமிழ்நாட்டிலிருந்து துபாய்க்கு பல பிரபலமான விமான நிறுவனங்கள் சேவை வழங்குகின்றன. அவை:
-
Emirates
-
Air India Express
-
IndiGo
-
Flydubai
-
SpiceJet
-
Air Arabia
இந்த விமான நிறுவனங்கள் அனைத்தும் துபாய்க்கு சேவை வழங்கினாலும், குறைந்த செலவில் பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு Air Arabia ஒரு சிறந்த பட்ஜெட் தேர்வாக இருக்கிறது.
சென்னை டூ ஷார்ஜா :

நான் சென்னையிலிருந்து துபாய் செல்ல பட்ஜெட் விமான நிறுவனமான Air Arabia நிறுவனத்தை தேர்வு செய்தேன்.
இந்த விமானம் நேரடியாக துபாய் அல்ல, துபாய்க்கு அருகிலுள்ள Sharjah நகரத்திற்கு பயணித்தது.
Chennai International Airport இலிருந்து Sharjah International Airport வரை விமானப் பயணம் சுமார் நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஆகும்.
ஷார்ஜா விமான நிலையத்தை அடைந்ததும், சுற்றுலா நிறுவனத்தினரின் சார்பாக நம்மை அழைத்துச் செல்ல கார் தயார் நிலையில் இருந்தது. அதில் அமர்ந்து நாங்கள் துபாயை நோக்கி பயணத்தை தொடங்கினோம்.
ஷார்ஜாவிலிருந்து Dubai நகரம் சுமார் 20 முதல் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. குறுகிய நேர பயணத்திற்குப் பிறகு நாங்கள் துபாயில் உள்ள 4-ஸ்டார் ஹோட்டலுக்கு சென்றடைந்தோம்.
எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறை 10-வது மாடியில் இருந்தது. அந்த அறையின் பால்கனியில் நின்று துபாயை பார்த்தபோது, அந்த நகரத்தின் அழகை சொல்ல வார்த்தைகளே இல்லை.
பகல் நேரத்தில் துபாயின் நவீன கட்டிடங்களையும் நகரத்தின் அமைப்பையும் பார்ப்பது ஒரு தனி அனுபவமாக இருந்தது.
அதிலும் மாலை நேரத்தில் நகரம் முழுவதும் வண்ணமயமான விளக்குகளில் மின்னும் போது, துபாயின் அழகு இன்னும் அதிகமாக கண்களை கவர்ந்தது.
அந்த காட்சி நம்முடைய மனதை முழுவதும் கொள்ளை கொள்ளும் விதமாக இருந்தது.
துபாய் கப்பலும் இரவு விருந்தும் :

விமானப் பயணத்தின் களைப்பு இருந்தாலும், சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகு மீண்டும் சுற்றுலாவிற்கு தயாரானோம். அடுத்ததாக நாம் முதலில் சென்று ரசித்த இடம் ஓல்ட் துபாயில் நடைபெறும் கப்பல் பயணம்.
Old Dubai பகுதியில் உள்ள Deira என்பது இரவு நேரத்தில் மிகவும் அழகாக காட்சியளிக்கும் ஒரு இடம்.
இங்கு வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட துபாய் நகரத்தின் அழகை ரசித்துக்கொண்டே மிதக்கும் கப்பலில் இரவு விருந்து சாப்பிடும் அனுபவம் சுற்றுலா பயணிகளிடையே மிகவும் பிரபலமானது.
அந்த அனுபவத்தை ரசிக்கவே நாங்களும் அந்த இடத்திற்குச் சென்றோம்.
இந்த பகுதியில் உள்ள Dubai Creek நீரோடையில் கப்பல் பயணம் நடைபெறும். சுமார் 4 முதல் 6 கிலோமீட்டர் தூரம் வரை கப்பல்கள் சென்று திரும்பும்.
அந்த நீரோடையில் பல அழகான கப்பல்கள் அங்கும் இங்கும் மெதுவாக மிதந்து செல்வதை பார்க்கவே ஒரு தனி மகிழ்ச்சி.
இந்த கப்பல் பயணத்திற்கு சிறந்த நேரம் பொதுவாக இரவு 8 மணி முதல் 10 மணி வரை ஆகும். மொத்தமாக சுமார் 2 மணி நேரம் இந்த பயணம் நீடிக்கும்.
நாங்கள் சென்ற கப்பல் பயணம் Dubai Creek Dhow Dinner Cruise எனப்படும் ஒரு பிரபலமான சுற்றுலா அனுபவமாகும்.
இந்த கப்பல் பயணத்தில் சைவம் மற்றும் அசைவம் என இரண்டு வகையான உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இங்கு நமக்கு பிடித்த உணவை நாமே எடுத்துக் கொள்ளும் Buffet முறை இருக்கும்.
உணவை பொறுத்தவரையில் Unlimited என்பதால், நமக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு சாப்பிடலாம்.
தண்ணீரில் மெதுவாக மிதக்கும் கப்பலில் அமர்ந்து கொண்டு, துபாய் நகரத்தின் கண்கவர் இரவு அழகை ரசித்துக்கொண்டே உணவு சாப்பிடுவது உண்மையில் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
அதோடு இந்த கப்பல் பயணத்தில் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளும் நடைபெறும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வகையில் மேஜிக் ஷோ, பாரம்பரிய அரபு நடனமான Tanoura Dance, மேலும் டீ, காபி, சாப்ட் டிரிங்க்ஸ்போன்றவை அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறு மகிழ்ச்சியாக இந்த இரவு விருந்தை முடித்த பிறகு, சுற்றுலா நிறுவனத்தினர் மீண்டும் எங்களை ஹோட்டலுக்கு அழைத்து வந்து பாதுகாப்பாக இறக்கிவிட்டார்கள்.
அந்த இரவு அனுபவம் துபாய் பயணத்தின் மிகவும் அழகான தொடக்கமாக அமைந்தது.
துபாய் சுற்றுலா ஒரு கண்ணோட்டம்:

துபாயில் இந்த சுற்றுலாவில் நாம் சுற்றிப்பார்க்கும் இடங்களை பற்றி ஒரு தொகுப்பை காணலாம். முதல் நாள் மிதக்கும் கப்பலில் இரவு விருந்து, அடுத்த நாள் துபாயில் உள்ள துபாய் சிட்டி டூர் அழைத்து செல்வார்கள்.
துபாய் சிட்டி டூரை தொடங்குவதற்கு முன், இந்த ஐந்து நாட்கள் துபாயில் நாம் சுற்றிப்பார்க்கப் போகும் முக்கியமான சுற்றுலா இடங்களை பற்றி முதலில் பார்க்கலாம். இந்த பயணத்தில் குறைந்தபட்சமாக 10 முக்கியமான இடங்களைசென்று ரசிக்க திட்டமிட்டுள்ளோம்.
1. புர்ஜ் கலீஃபா
உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற பெருமைக்குரியது Burj Khalifa.
இந்த பிரம்மாண்டமான கட்டிடம் சுமார் 2716.5 அடி (828 மீட்டர்) உயரம் கொண்டது. துபாயின் அடையாளமாகக் கருதப்படும் இந்த கட்டிடத்தை பார்க்க உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
2. புர்ஜ் அல் அரப்
உலகின் மிகவும் ஆடம்பரமான ஹோட்டல்களில் ஒன்றாக விளங்குவது Burj Al Arab.
இது பொதுவாக 7-ஸ்டார் ஹோட்டல் என்று அழைக்கப்படுகிறது. கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள இந்த ஹோட்டலின் உயரம் சுமார் 321 மீட்டர்.
3. துபாய் பிரேம்
துபாயின் முக்கியமான சுற்றுலா அதிசயங்களில் ஒன்று Dubai Frame.
இங்கு நின்று Old Dubai மற்றும் New Dubai ஆகிய இரு பகுதிகளையும் ஒரே நேரத்தில் 360° கோணத்தில் பார்க்க முடியும். துபாயின் பழைய நகரமும் புதிய நகர வளர்ச்சியும் ஒரே பார்வையில் தெரியும் என்பது இதன் சிறப்பு.
4. மிராக்கிள் கார்டன்
Dubai Miracle Garden உலகின் மிகப்பெரிய இயற்கை மலர் தோட்டங்களில் ஒன்றாகும்.
இங்கு 150 மில்லியனுக்கும் அதிகமான மலர்கள் பல்வேறு வடிவங்களில் அலங்கரிக்கப்பட்டிருக்கும். சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் துபாய் இடங்களில் இதுவும் ஒன்று.
5. துபாய் அக்வேரியம்
Dubai Aquarium and Underwater Zoo உலகின் மிகப்பெரிய அக்வேரியங்களில் ஒன்றாகும்.
இங்கு 33,000 க்கும் மேற்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் உள்ளன. இந்த அக்வேரியம் உலக சாதனைப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
6. துபாய் மால்
The Dubai Mall என்பது Dubai நகரத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான ஷாப்பிங் மால்களில் ஒன்றாகும்.
இந்த மாலில் 1200 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளதால் இது ஒரு உண்மையான Shopping Paradise என்று சொல்லலாம். ஷாப்பிங் மட்டுமல்லாமல், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு உள்ளதால் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் முக்கிய இடமாகவும் திகழ்கிறது.
சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் சிறிது நேரம் ஓய்வு எடுத்து மகிழும் இடமாகவும் இந்த மால் செயல்படுகிறது.
7. பாம் ஜுமேரா தீவு
Palm Jumeirah என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை தீவு.
பனைமர வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தீவு உலகின் மிக பிரபலமான பொறியியல் அதிசயங்களில் ஒன்றாகும். அழகான கடற்கரை, ஆடம்பரமான ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் ஆகியவற்றால் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இடமாக இது திகழ்கிறது.
8. குளோபல் வில்லேஜ்
Global Village Dubai துபாயின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.
இங்கு உலகின் பல நாடுகளின் உணவு, உடை, கலாச்சாரம், கைவினைப் பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒரே இடத்தில் அனுபவிக்க முடியும். அதனால் குடும்பத்துடன் நேரத்தை செலவிட மிகவும் சிறந்த இடமாக குளோபல் வில்லேஜ் கருதப்படுகிறது.
9. தி பாயிண்ட் பீச்
The Pointe Dubai என்பது Palm Jumeirah பகுதியில் அமைந்துள்ள ஒரு அழகான கடற்கரை பொழுதுபோக்கு மையம்.
இங்கு கடற்கரை, உணவகங்கள், ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் பிரபலமான இடங்களில் இதுவும் ஒன்று.
10. துபாய் டெசர்ட் சபாரி
Dubai Desert Safari என்பது துபாயில் தவறாமல் அனுபவிக்க வேண்டிய முக்கியமான சுற்றுலா அனுபவங்களில் ஒன்றாகும்.
பாலைவன மணலில் உயர்தர வாகனங்களில் தாறுமாறாக சவாரி செய்வது (Dune Bashing) மிகவும் சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும். மாலை நேரத்தில் பாலைவனத்தில் சூரியன் மறையும் அழகைக் காண்பது உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவம்.
அதோடு ஒட்டக சவாரி, பாரம்பரிய அரபு நிகழ்ச்சிகள், கலாச்சார நடனங்கள் மற்றும் இரவு விருந்து போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளையும் இங்கு ரசிக்க முடியும்.
இவ்வாறு துபாய் சுற்றுலா தளம் காலத்திற்கேற்ப தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. நவீன கட்டிடங்கள், ஆடம்பரமான வசதிகள் மற்றும் அரேபிய கலாச்சாரத்தின் வசீகரம் ஆகிய அனைத்தையும் ஒரே நகரத்தில் அனுபவிக்க முடிவதால், உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் முக்கிய சுற்றுலா தலமாக துபாய் திகழ்கிறது.








