இலங்கையின் ஊட்டி  – நுவரெலியா:

நம்முடைய வாழ்க்கை பயணத்தில் இருந்து விடைகொடுத்து சற்று மண்ணையும் விண்ணையும் ரசிக்க முற்படுவோம். உலகில் பல இடங்கள் இருந்தாலும் ஒவ்வொன்றும் தனி தனி சிறப்பை கொண்டுள்ளது.

அவற்றுள் பொதுவானது இயற்கை எழில்மிகு தாவரங்கள்,நீண்டு காணப்படும் நீலநிற கடல்கள்,பல வண்ணங்களில் மண் வகைகள், ஆர்ப்பரித்து கொட்டும் நீர்விழ்ச்சிகள், வேகமாக மலைகளிலும் பாறைகளிலும் பாய்ந்தோடும் ஆறுகள், பார்த்த உடனே பயத்தை தூண்டு

பள்ளத்தாக்குகள், அரியவகை விலங்கினங்கள், கண்களை பறிக்கும் வண்ண வண்ண பூக்கள் என பூமியை ஆட்கொண்டுள்ளவற்றின் அழகை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.இவற்றை வரிகளில் சொல்லும் பொழுது மனம் தானாகவே ஒரு வித பூரிப்பை நாடிச்செல்வதை உணரலாம்.

இருந்தாலும் அவற்றை நேரில் சென்று அனுபவிக்கும் பொழுது ஆழ்மனம் குழந்தையை போல துள்ளிக்குதித்து ஓடும்.கற்பனையில் நீண்ட நாட்கள் வாழ்ந்த நமக்கு நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்.

நானும் இதுபோல தான் கற்பனை கடலில் மூழ்கியிருந்தேன்.சற்று கற்பனையில் இருந்து விலகி நிஜத்தை தேட முற்பட்டேன்.அதற்காக நான் தேர்ந்தெடுத்த ஆயுதம் தான் சுற்றுலா .

ஆம் சுற்றுலாவில் கல்வி சுற்றுலா ,ஆன்மிகம் சுற்றுலா ,இன்ப சுற்றுலா என சில வகை உண்டு.இதில் இப்போது நமக்கு ஏற்ற சுற்றுலா ஆன்மிகம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த சுற்றுலா. ஆம் நம்முடைய தமிழர்களின் கலாச்சாரம் அதிகம் ஒத்துப்போகும்  இடம் இலங்கை சுற்றுலா தான்.

இலங்கை ஒரு கண்ணோட்டம் :-

இலங்கை என்றாலே நம்முடைய கண்முன் நிற்பது இந்திய பெருங்கடலின் முத்து போல காட்சிளிக்கும் ஒரு சிறுதீவு.இலங்கை ஒரு பிரபலமான சுற்றுலாத்தலம்.

இங்கு உள்நாட்டு கலாச்சாரம்,இயற்கை எழில் கொஞ்சும் அழகு,வரலாற்று நினைவு சின்னங்கள் என அனைத்தும் இங்கு சுற்றுலா வரும் பயணிகளின் மனதை வெகுவாக ஈர்க்கும் தனித்துவமான தீவு.

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சுற்றுலா தலங்களான அனுராதபுரம்,பொலன்னறுவை மற்றும் சிகிரியா நகரங்கள் இலங்கையின் பொக்கிஷம் எனலாம்.2,500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது.

அதேபோல ரத்தினகிரி இரத்தின கற்களான நீலக்கல்,மாணிக்கம் மற்றும் நிலவுக்கற்கள் உற்பத்தி செய்வதில் இலங்கை மிகவும் பிரபலமான தீவு. இலங்கையானது பலதரப்பட்ட மக்கள்தொகையைக் கொண்டிருந்தாலும் முதன்மையானவர்களாக சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் கருதப்படுகின்றனர்.

அதே போல இங்கு பேசப்படும் மொழிகளில் சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்றவை பேசப்படுகிறது.இலங்கைக்கு சிலோன்,ஸ்ரீலங்கா,இலங்கை என பல பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது.

அதிக அளவில் வெளிநாட்டினர்களின் பார்வை செலுத்தும் இடமாக மாறியுள்ளது நம்முடைய இலங்கை.அதோடு இலங்கை என்றாலே தேயிலைக்கு மிகவும் பிரபலமான ஒரு இடம்.

உலகளவில் தேயிலை ஏற்றுமதியில் முதல் மூன்று இடங்களில் ஒரு இடத்தை இலங்கை பிடித்துள்ளது.

அதோடு தேயிலை தோட்டங்களின் பசுமையான நிலப்பரப்பு மற்றும் மூலிகைகளின் நறுமணம் காற்றில் பரவி இதமான அனுபத்தை நமக்களிக்கிறது.

இலங்கை தேயிலைக்கு மட்டும் அல்ல மசாலா பொருளான இலவங்க பட்டைக்கு பெயர் பெற்றது. நாம் இப்பொழுது இலங்கையில் உள்ள நுவரெலியா சென்று சுற்றிப்பார்க்க போகிறோம்.

எப்படி செல்வது :

நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து 5 நாள் சுற்றுலாவாக இலங்கைக்கு புறப்பட தயாராக இருந்தோம்.

ஒரு வழியாக இலங்கைக்கு சென்று அங்குள்ள சுற்றுலா இடங்களை சுற்றிப்பார்க்க ஆரம்பித்தோம். இலங்கையில் உள்ள கொழும்பு,யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு வழியாக சென்று திருகோணமலையை அடைந்தோம்.

அடுத்ததாக கண்டி,சிகிரியா போன்ற இடங்களுக்கு சுற்றுலா துறையினர் நம்மை அழைத்து சென்று அங்குள்ள சிறப்புமிக்க இடங்களை சுற்றிப்பார்த்து ரசித்தோம்.

அதன் பிறகு அதற்கு அடுத்த நாள் ரத்தினகிரி சென்று ரத்தினக்கற்கள் எப்படி எடுக்கப்படுகிறது என நேரில் சென்று ஒரு ஆய்வு செய்தோம்.

அதன் பிறகு அப்புத்தளை வழியாக செல்லும் பொழுது அங்குள்ள பல இடங்களை சுற்றிப்பார்த்து பிறகு,தம்பானை என்ற இடத்தில காட்டு வாசிகளுடன் ஒரு நாள் சுற்றிப்பார்த்து பிறகு அடுத்ததாக நாம் சென்ற இடம் தான் இலங்கையில் உள்ள நுவரெலியா.

எங்கு உள்ளது :-

இலங்கையின் ஒளிநகரம் என அழைக்கப்படும் நுவரெலியா,இலங்கையில் உள்ள மத்திய மகாணத்தில் அமைந்துள்ள நகரம்.

இது இலங்கையின் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் . மலைக்கு நடுவே அமைந்துள்ள உயரமான பகுதி தான் நுவரெலியா.கடல்மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 1893 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது .

இலங்கையின் ஊட்டி அல்லது லிட்டில் இங்கிலாந்து – நுவரெலியா :

இலங்கையில் இன்று நாம் சுற்றிப்பார்க்க உள்ள சுற்றுலாத்தலம் நுவரெலியா. தமிழ்நாட்டிற்க்கு எப்படி ஊட்டி,கொடைக்கானல் இயற்கையின் ராணி மற்றும் இளவரசி என்று அழைக்கப்படுகிறதோ அதுபோல இலங்கைக்கு நுவரெலியா தான் ஊட்டி கொடைக்கானல் போல.

நுவரெலியாவில் எப்பொழுதும் குளிர்ச்சியான காலநிலையை நிலவும்.இது ஒரு மலைவாழ் ஸ்தலம் என்று சொல்லலாம்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் பசுமை போர்த்திய தேயிலை தோட்டங்கள் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் மனதையும்,கண்களையும் கவரும்.அந்தளவிற்கு நுவரெலியாவில் இயற்கை அழகு கொட்டிக்கிடக்கிறது.

முக்கியமாக ஆங்கிலேயர்கள் உல்லாச பயணம் மேற்கொள்ளும் இடங்களில் முக்கிய பங்கு வகிக்கும் இடமாக இந்த ஸ்ரீலங்காவின் நுவரெலியா உள்ளது.

19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இம்மலைவஸ்தலத்தை லிட்டில்
இங்கிலாந்து என்றும் குட்டி இங்கிலாந்து என்றும் அழைத்தனர்.

இங்குள்ள குளிர்ச்சியான காலநிலை வெளிநாட்டினரான பிரிட்டிஷ்காரர்களை இங்கிலாந்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

தேயிலை நாடு :-

இலங்கையில் பல வியக்கும் சுற்றுலாத்தலங்கள் இருந்தாலும் நுவரெலியா முற்றிலும் மாறுபட்ட சுற்றுலாத்தலம் .இலங்கையில் பல இடங்களில் தேயிலை உற்பத்திக்கு முக்கியப்பங்கு வகிக்கிறது.

அதில் நுவரெலியா தேயிலை உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பதால் நுவரெலியாவிற்கு இலங்கையின் தேயிலை நாடு என்ற பெருமைக்குரியது.வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று ரசிக்க கூடிய சுற்றுலா தளங்களில் ஒன்று.

இங்கு பசுமையான தேயிலை தோட்டங்கள்,தாவரவியல் பூங்காக்கள் ,உலகமுடிவு மற்றும் நுவரெலியவை சுற்றியுள்ள ஹர்ட்டன் சமவெளி தேசிய பூங்கா என இங்கு பல முக்கியமான இடங்களை சுற்றிப்பார்க்கலாம்.

ஆங்கிலேயர்களின் உல்லாச சுற்றுலா தலமாக இருப்பதற்கு முன்னரே ஸ்ரீலங்கா மிகவும் பிரபலமானது.அதாவது அன்றிலிருந்து இன்று வரைக்கும் பேசப்படும் இராமாயணத்திற்கும் இலங்கைக்கு முக்கிய தொடர்பு உண்டு.

நுவரெலியாவில் உள்ள சுற்றுலா தலங்கள் :-

நண்பர்கள்,குடும்பத்தினர் மற்றும் புது தம்பதிகள் உல்லாச பயணம் மேற்கொள்ளும் இடங்களில் ஒன்றாக நுவரெலியா உள்ளது.இங்கு சுற்றிப்பார்க்க பல இடங்கள் உள்ளது.

அவற்றில் கிரிகோரி ஏரி,விக்டோரியா பூங்கா,ஒற்றை மரம் மலை ,லக்சபனா நீர்வீழ்ச்சிகள்,பேக்கர் நீர்வீழ்ச்சிகள்,சீதா அம்மன் கோவில் ,ஹக்கல தாவரவியல் பூங்கா ,வரலாற்று சிறப்பு மிக்க தபால் நிலையம் என பல கண்கவர் இடங்கள் உள்ளன.

இலங்கையில் உள்ள மற்ற சுற்றுலா இடங்களை காட்டிலும் குளிர்பிரதேசமாக பார்க்கப்படும் நுவரெலியாவில் கூட்டம் கூட்டமாக சுற்றுலா பயணிகள் வெளிநாட்டிலிருந்தும்,வெளி மாவட்டங்களில் இருந்தும் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இவற்றில் ஒரு சில சுற்றுலா தளங்களை மட்டுமே நாம் சுற்றிப்பார்க்க போகிறோம்.அவை கிரிகோரி ஏரி,சீதா அம்மன் கோவில்,பழங்கால தபால், நிலையம் மற்றும் ஹக்கல தாவரவியல் பூங்கா போன்றவை.

சீதா அம்மன் கோவில்(Seethai Amman Thirukkovil)-அசோக் வாடிகா சீதா கோயில் Ashok Vatika Sita Temple):-

மிகவும் பிரசித்திபெற்ற இக்கோவில் ஹாக்கள் தாவரவியல் பூங்காவில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிலும், நுவரெலியா – கண்டி செல்லும் வழியில் நுவரெலியாவின் இயற்கை எழில் சூழ்ந்த நகரத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

இந்த சீதா அம்மன் ஆலயம் சீதா எலிய என்ற கிராமத்தில் ஒரு மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இராமாயணம் கதைகள் பற்றி புத்தகங்களிலும் , நாவல்களிலும், தாத்தா பாட்டி கதைகள் கூறியும் கேள்விப்பட்டிருப்போம்.

அந்தளவில் அனைவருடைய மனதில் பிரபலமடைந்த கதையில் வரும் முக்கிய கதாபாத்திரமான ராவணன் மன்னன் சீதா தேவியை கடத்தி வந்து இலங்கையில் உள்ள அசோகா வனத்தில் சிறைபிடித்ததாக கூறப்படும் இடம் இதுதான்.

இதனை நினைவுகூறும் விதமாக தான் இந்த சோக் வாடிகா சீதா கோயில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கோவிலுக்கு பல கதைகள் சொல்லப்பட்டாலும் அவற்றை உண்மையாக்கும் விதமாக , இலங்கையில் சீதாதேவிக்கு என முதன் முதலில் கட்டப்பட்ட கோவில் இதுதான்.

இக்கோவில் நுழைவாயில் இருபக்கமும் ஹனுமானின் திருவுருவ சிலை வடிவைமைக்கப்பட்டுள்ளது.மூலஸ்தானத்தில் ராமனின் ஒரு புறம் சீதாதேவியும், மறுபுறம் தம்பி லட்சுமணனும் காட்சியளிப்பார்கள்.

கோவில் வளாகத்தில் ஹனுமான் பாதமும்,கோவிலின் பின்புறம் ஒரு ஆறு ஒன்று ஓடுகிறது “சீதா ஆறு” என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆறு சீதாதேவி கண்ணீர்மல்க தினமும் பிரார்த்தனை செய்து வேண்டியதால் என்றும் வற்றாத நதியாக ஓடுகிறது என்றும் இங்குள்ள மக்களால் நம்பப்படுகிறது.இங்குள்ள அசோக வனத்தில் தான் சீதாபிராட்டியை

சிறைபிடித்ததாகவும்,ஹனுமான் முதன்முதலில் இங்கு தான் சீதா தேவியை கண்டதாகவும் சொல்லப்படுகிறது.ராமனின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கு தான் சீதையை ஹனுமான் நலம் விசாரித்ததாகவும் நம்பப்படுகிறது.

இந்த
கோவிலுக்கு வெளியே நதிக்கரையில் ஹனுமானின் கால் தடம் பாறையில் பாதிக்கப்பட்டுள்ளது.அதேபோல ஹனுமான் சீதையை இங்குள்ள அசோக வனத்தில் கண்டது போல சிற்பங்களுக்கும் வைக்கப்பட்டுள்ளது.

கோவில் திறக்கப்படும் நேரம் :

காலை :8 AM மணி முதல் 1 PM
மதியம் :2 PM மணி முதல் 6.30 PM வரை

நுழைவுக்கட்டணம்:

வெளிநாட்டினருக்கு இலங்கை ரூபாயில் நுழைவுக்கட்டணமாக ஒருவருக்கு நூறு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சீதையம்மன் கோவிலை பார்த்து ரசித்த பிறகு அடுத்ததாக நாம் சென்ற
இடம் ஹக்கல தாவரவியல் பூங்கா.

ஹக்கல தாவரவியல் பூங்கா (Hakgala Botanical Garden):-

இலங்கையில் உள்ள ஐந்து மிகப்பெரிய தாவரவியல் பூங்காக்களில் ஹக்கல தாவரவியல் பூங்காவும் ஒன்று. உலகின் மிக உயரமான தாவரவியல் பூங்கா என்ற பெருமைக்குரியது.

கடல்மட்டத்திலிருந்து சுமார் 5700 முதல் 6000 அடி உயரத்தில் உள்ளது.

சீதா அம்மன் கோவில் (சீதா எலிய)

கோவிலுக்கும் ஹக்கல தாவரவியல் பூங்காவிற்கும் இடைப்பட்ட தூரம் அதிகபட்சமாக ஒன்று அல்லது இரண்டு கிலோமீட்டர் தூரமும் நுவரெலியாவில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

இப்பூங்காவானது பதுளை நெடுஞ்சாலையில் உள்ளது.இப்பூங்காவானது 28 ஹெக்டேர் பரப்பளவை கொண்டது.1861 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின் மலேரியா நோயினை குணப்படுத்தும் தாவரத்தின் சோதனை தோட்டமாக வளர்க்கப்பட்டது.

பின்பு தேயிலை சாகுபடி செய்யும் இடமாக கொஞ்ச காலம் இருந்தது.அதன் பிறகு ஒட்டுமொத்த நிலமும் அழகான தோட்டங்களாக பராமரிக்கப்பட்டு தாவரவியல் பூங்காவாக மாற்றப்பட்டது.இதில் அழகிய நடைபாதைகள்,கவர்ச்சிகரமான தாவரங்கள்,மரங்கள்,பலவகையான பூக்கள் மற்றும் அழகுபடுத்தப்பட்ட புல்வெளிகள் என இதன் அழகை வர்ணிக்க

வார்த்தைகளே இல்லை. சீதா தேவியை சிறைபிடித்து இராவணன் இலங்கையில் உள்ள அசோக வனத்தில் வைக்கப்பட்ட கதைகள் நாம் அறிந்தவையே ,இக்கதையில் வரும் அசோகவனத்தின் ஒரு பகுதி தான் ஹக்கல தாவரவியல் பூங்கா இடம்பெற்றுள்ளது.

இப்பூங்காவில் ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான் மற்றும் இமயமலை போன்ற பல நாடுகளுடைய தாவர இனங்கள் வளர்க்கப்படுகிறது.

பார்வையிட சிறந்த நேரம்:

ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஹக்கலா தாவரவியல் பூங்காவைப் பார்வையிட சிறந்த நேரம். மேலும் வானிலை இனிமையானதாக இருக்கும்.

ஹக்கல தாவரவியல் பூங்கா ஒரு பார்வை :-

இங்கு பல்வேறு வகையான தாவரங்கள்,பறவைகள் மற்றும் விலங்குகள் உள்ளன.அவற்றில் மல்லிகை,பல வண்ணங்களில் ரோஜாகள் , ஃபெர்னரி போன்றவை உண்டு.

இங்கு தாவரங்களை தவிர பல வண்ணங்களில் வண்ணத்துபூச்சிகள் பூக்களுக்கு நடுவே பறந்து செல்லும் அழகு மேலும் தோட்டத்தை அழகூட்டுகிறது.இங்கு வீசும் காற்று குளிர்ச்சியாகவும் மணமாகவும் வீசும்.

இவற்றை உணரும்பொழுது நமக்கு அளவுகடந்த புத்துணர்ச்சியை உடலுக்கு அளிக்கிறது.தோட்டம் முழுவதும் மரத்தால் செய்யப்பட்ட பாலங்கள்,சிறு சிறு நீரோடைகள் ,அற்புதமான ஊசியிலை மரங்கள் என பூங்காவை மேலும் அழகூட்டுகிறது.

இங்கு வில்லியம் நெக் அவர்களின் நெக் கோடைகால விடுதி(Nock Summer Hut),ரோஜா தோட்டம்(Rose Garden),கண்ணாடி வீடு(Glass House),ஜப்பான் தோட்டம்(Japanese Garden),வனப்பகுதி(Arboretum),குன்று பூந்தோட்டம்(Rock Garden),பன்னத் தோட்டம்(Fernery),சிங்கோனா மரம் (Cinchona tree) ,பழைய தேயிலை புதர்கள்(Old Tea Plant),மசாலா வீடு(Spice house) மற்றும் மூலிகை தோட்டம் (Medicinal Garden),பூச்செடி விற்பனை நிலையம்(Plant asales centre) என பலவகையான பிரிவில் தாவரங்கள் பராமரிக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகளின் கண்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

நுழைவு கட்டணம் :-

வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.பெரியவர்களுக்கு 3000 ரூபாயும்,12 வயதிற்குட்ப்பட்ட குழந்தைகளுக்கு 1500 ரூபாயும்,பள்ளி குழந்தைகளுக்கு 2000 ரூபாயும் இலங்கை ரூபாயின் மதிப்பின்படி வசூலிக்கப்படுகிறது.

இங்கு காலை 7.30 am முதல் மாலை 5 Pm வரை நுழைவுசீட்டு விநியோகிக்கப்படும். தேக்கடி சுற்றுலா

கிரிகோரி ஏரி :-

கிரிகோரி ஏரி 1873 ல் சர் வில்லியம் கிரிகோரி என்பவரால் உருவாக்கப்பட்ட செயற்கை நீர்த்தேக்கம்.இந்த ஏரி இயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரி அல்ல மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை ஏரி.

இந்த ஏரியில் பசுமையான புல்வெளிகள் மற்றும் அழகான கார்டன்கள் சுற்றுலாப்பயணிகள் மனதை வெகுவாக கவர்கிறது.மேலும் சுத்தமான காற்று,அழகிய படகு பயணங்கள்,நடைபாதைகள் ஆங்காங்கே ஓய்வெடுக்கும் விதமாக சில இருக்கைகளும் உள்ளன.

இந்த இடம் பசுமையான மலைகளால் சூழப்பட்டு குளிர்ந்த காலநிலையுடன் மாலை நேரத்தில் நிதானமான உலா வருவதற்க்கு ஏற்ற இடம்.

மாலை நேரங்களில் சில சமயம் குதிரை சவாரியும் செய்யலாம்.இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது மனம் லேசாகி நம்மை வேறு உலகிற்க்கு அழைத்து செல்கிறது.இங்கு ஏரியை சுற்றி சில உணவகங்களும் உள்ளன.

நுவரெலியாவில் உள்ள சீதா அம்மன் கோவிலின் உள்ளே கேமெராக்கள் அனுமதி இல்லை.அதேபோல பல இடங்களில் நம்முடைய நினைவாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து மகிழலாம்.

நுவரெலியாவை பொறுத்தவரையில் தமிழகத்தில் உள்ள ஊட்டி கொடைக்கானலில் இருப்பது போன்ற உணர்வை நமக்கேற்படுத்துகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top